மாலைதீவில் கடந்த 45 நாட்களாக அமுலில் இருந்த அவசரகாலச்சட்டத்தினை ரத்துச் செய்வதாக அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்யவும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது எனவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதனை அடுத்து தனது பதவிக்கு ஆபத்து வரும் எனக்கருதி அப்துல்லா யாமீன் அவசரகாலச்சட்டத்தினை அமுல்ப்படுத்தியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மற்றும் தலைமை நீதிபதியையும் கைது செய்திருந்தார். இந்தநிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னைய உத்தரவுகளை ரத்து செய்தனர். இதனை அடுத்து, பாராளுமன்ற ஒப்புதலுடன் அவசரகால சட்டம் மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
மேலும் முன்னாள் ஜனாதபிதி , நீதிபதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 9 பேர் மீது நீதிமன்றில் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதுடன் நீதிபதிகள் 3 பேர் அரசை கவிழ்ப்பதற்காக லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 45 நாட்களாக நீடித்து வந்த அவசரகாலச்சட்டத்தினை நீக்கிய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் இன்றுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என அறிவித்துள்ளார்.
Add Comment