வலிந்து காணமலாக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேசம் தலையிடவேண்டும் என காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் 07.03.2018 அன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
இந்த சட்டமூலத்தை கொண்டுவருவதற்குக் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் எடுத்திருக்கிறது என்பது மிகவும் கவலைக்குரியது. இந்த நாட்டிலே அதிகமானோர் வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டார்கள். குறிப்பாக, வடக்கு, கிழக்குவாழ் தமிழர்கள் 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமக்கு நடந்த அநீதிகளுக்கு எதிராக மனித நேயத்தோடும் ஜனநாயக முறைப்படியும் முன்னெடுத்த போராட்டங்கள் எல்லாம் ஆயுத முனையில் அடக்கப்பட்டன; அந்த மக்கள் ஆயுத ரீதியாகத் தாக்கப்பட்டனர் அந்தநேரத்தில்தான் அவர்கள் துப்பாக்கிகளைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்த நிலைமையை அரசுதான் அவர்கள்மீது திணித்தது. அதன் பின்னர் நீண்ட பெரும் போராட்டத்துக்கு மத்தியில் 2009ஆம் ஆண்டிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள்; ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனார்கள். இந்த நாட்டிலே இதனை விசாரிப்பதற்காகப் பல்வேறுபட்ட ஆணைக்குழுக்களை அரசாங்கம் நியமித்தது. குறிப்பாக தமிழர்கள் மீதான ஓர் இனப்படுகொலையை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷவும் இந்த நாட்டிலே செய்த அதிபயங்கரமான யுத்தம் மற்றும் கொடூரமான கொலைகளினால் பல்வேறுபட்டவர்களும் காணாமலாக்கப்பட்டார்கள்.
மக்கள் முள்ளிவாய்க்காலிலிருந்து வவுனியாவுக்கு வந்தபோது, “நீங்கள் சரணடையுங்கள்! உங்களை விடுவிக்கிறோம்!” என ஒலிபெருக்கிமூலம் அறிவிக்கப்பட்டபோது, இராணுவத்திடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்ட பலருடைய நிலைமை இன்றும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. இந்த விடயங்கள் பற்றிக் கண்டறிவதற்குத்தான் அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முதன்முதலில் நல்லிணக்க ஆணைக்குழுவை – LLRCஐ நியமித்தது. இருந்தபோதிலும் அந்த மக்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் சென்று சுதந்திரமாகத் தங்களுடைய வாக்குமூலங்களை அளிக்க முடியாதவாறு, அந்த நேரத்தில் இராணுவப் புலனாய்வாளர்களும் பொலிஸ் புலனாய்வாளர்களும் இலங்கையிலுள்ள ஏனைய புலனாய்வாளர்களும் தெருக்களிலே வைத்து அந்த மக்களைத் தடுத்தார்கள். அதாவது, குறித்த ஓர் இடத்திலே வாக்குமூலம் பெறப்படுகின்றது என்றால், இன்னோர் இடத்தில் கொட்டகைகள் அமைத்து “இங்கேதான் வாக்குமூலம் பெறப்படுகின்றது” என்று அந்த மக்களிடம் கூறி, அவர்களை அங்கு செல்லவிடாது தடுக்கப்பட்டதன்மூலம் அவர்களின் வாக்குமூலங்கள் வேறு திசைகளில் சிதறடிக்கப்பட்டன. இவ்வாறான நிலைமையிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நீதிபதிகள் கொடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட விடயங்களில் நான்கு விடயங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன. அதாவது, இந்த நாட்டிலே இனரீதியான யுத்தம் நடந்திருக்கிறது; அந்த யுத்தத்தின் காரணமாக இந்த மக்கள் கொன்றொழிக்கப்பட்டிருக்கின்றார்கள்; அவர்களுக்கு நீதியான விசாரணை வேண்டும்; அதேநேரம், இந்த நாட்டிலே இருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்; இந்த நாட்டிலே நடந்திருக்கின்ற பிரச்சினைகளுக்கான தீர்வைச் சரியான முறையில் அணுக வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விடயங்களைக்கூட அரசாங்கம் கிஞ்சித்தும் தன்னுடைய கவனத்திலே எடுக்கவில்லை. பின்னர் மேலும் ஏமாற்றுவதற்காக முன்னாள் நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலே ஜனாதிபதி ஆணைக்குழுவை உருவாக்கியது. ஆனால், இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது மக்களிடம் விசாரணை செய்த நேரத்தில், “உங்களுக்கு ஆடு தரவா? கோழி தரவா?” என்று இழக்காரமான முறையில் கேட்டதே தவிர, சரியான முறையில் நீதியைத் தரவில்லை.
இவற்றையெல்லாம் கடந்து 2011- 2015 வரையில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைவாக, 2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜெனீவாப் பிரகடனத்தின் 30(1)இன் கீழுள்ள சகல விடயங்களையும் இலங்கை ஏற்றுக்கொண்டது. அப்பொழுது வெளிநாட்டமைச்சராக இருந்த கௌரவ மங்கள சமரவீர அவர்கள் “காணாமற்போனோர் தொடர்பில் காரியாலயம் அமைக்கின்றோம்; அவர்கள் தொடர்பில் உடனடித் தீர்வைக் கொண்டுவருகின்றோம்; அவர்களைக் கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைக்கின்றோம்; நீதியை வழங்குகின்றோம்” என்று கூறினார். ஆனால், இரண்டரை வருடங்கள் கடந்தும் இதுவரை அந்த நீதி நிலைநாட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்றைய நாளில் இந்தச் சட்டமூலம் விவாதிக்கப்படுகின்றது. அதற்கான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் எங்கே குறித்த அலுவலகம் அமையும்? கொழும்பிலே அமைந்தால், வடக்கிலும் கிழக்கிலும் இருக்கின்றவர்கள் எவ்வாறு கொழும்புக்கு வந்து உரிய சாட்சியங்களையும் மற்றும் விடயங்களையும் முன்வைப்பார்கள்? எனவே, வடக்கிலும் கிழக்கிலும் காணாமற்போனோர் பற்றிய அலுவலகங்கள் குறைந்தது நான்கையேனும் நிறுவி, அங்கு அந்த மக்கள் யாருடைய இடைஞ்சலும் இல்லாமல் குறிப்பாக புலனாய்வுத் துறையினருடைய இடைஞ்சல்கள் இல்லாமல், சர்வதேச மேற்பார்வையோடு சுதந்திரமாகத் தங்களுடைய சாட்சியங்களை அளிப்பதற்கு வழிசெய்ய வேண்டும். என குறிப்பிட்டார்.