கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தசுதாகரை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களால் பெறப்பட்ட பத்தாயிரம் கையெழுத்துக்கள் அடங்கிய கருணை மனு இன்று கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (தலைமைப்பீடம்) திரு.பிருந்தாகரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆனந்தசுதாகரின் பிள்ளைகளினாலும், அவரது தாயாரினாலும் கையளிக்கப்பட்டது.
கடந்த 2018.03.15அன்று ஆனந்தசுதாகரின் மனைவி யோகராணி தனது கணவனின் ஆயுள்தண்டனையை அறிந்து அதிர்ச்சி நோய்க்கு ஆளாகி மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது இருபிள்ளைகளும் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்.
அநாதரவற்ற பிள்ளைகளுக்கு ஆதரவு வேண்டியும் அவர்களது தந்தையான ஆனந்தசுதாகர் அவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்யக்கோரியும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இருபதுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் கை எழுத்திட்டு மேற்கொண்ட இப்போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளையும் பூரண ஆதரவை வழங்கியிருந்தது.
கிளிநொச்சி வர்த்தக சங்கம், கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகம், கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள்குழு, கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளனம், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஒன்றியம், இந்து ஆலயங்களின் ஒன்றியம், இந்து கலாச்சார பேரவை, வலுவூட்டப்பட்ட பெண்களின் வலையமைப்பு என்பனவும் இணைந்து பேராதரவை வழங்கியிருந்தன.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மனுவின் பிரதிகள் அமெரிக்க, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளின் தூதரங்களுக்கும், ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மற்றும், இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.