குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வாக்களிப்பது தொடர்பில் எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக ஆங்கில இணையதளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
குறிப்பாக “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய நாடாளுமன்றக் குழு, எதிர்வரும் 2ஆம் திகதி, கொழும்பில் சந்தித்து, தீர்மானத்தை எடுக்குமெனவும் அதுவரை, கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிவிக்க முடியாது” எனவும் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே குறிப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதமருக்கு ஆதரவாக செயற்படுமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் குறித்து பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதில்லை என்ற தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதேவேளை, சீனாவிற்கு பயணம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மீளவும் நாட்டுக்கு அழைக்கப்பட உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது