நாட்டில் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மணல், கல் மற்றும் மண் விற்பனையை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்றையதினம் நடைபெற்ற புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகத்தின் வெள்ளி விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாம் வாழும் இந்த பூமியையும் இயற்கை மற்றும் சீவராசிகளையும் நேசித்து அவற்றை வளப்படுத்திப் பாதுகாக்கின்ற முக்கிய பொறுப்பு புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப்பணியகத்திற்கும் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும் உரியதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இவ்விரண்டு நிறுவனங்களும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
புவிச்சரிதவியல் துறையில் அகழ்வு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை புதிய தொழிநுட்பத்துடன் முறையாகவும் வினைத்திறனாகவும் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் முத்துராஜவெல பிரதேசத்தில் இடம்பெற்ற சுற்றாடல் அழிவுகள் குறித்து குறிப்பிட்ட ஜனாதிபதி மோசடி வியாபாரிகளிடமிருந்து சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு அரச நிறுவனங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் குறித்த திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது பற்றி தேடிப்பார்ப்பது முக்கியமான பொறுப்பாகும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது