முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 16ம் திகதி விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தனக்கு எதிராக செய்த விசாரணை முறை சட்டவிரோதமானது என உத்தரவிடக்கோரி தனது மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று (27.03.18) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் தனக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட அந்த ஆணைக்குழுவின் காலம் ஜனாதிபதியால் சரியான முறையில் நீடிக்கப்படவில்லை என பசில் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக ஆணைக்குழுவினால் தான் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் சட்ட ரீதியற்றது என்று உத்தரவிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.