குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இரணைமடுகுளத்திலிருந்து கிளிநொச்சிக்கு குடிநீரை விநியோகிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி நிலை எதிர்காலத்தில் மிகவும் மோசமான நிலையை அடையும் வாய்ப்பு உருவாகலாம் என்றும் சம்மந்தப்பட்ட திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சிக்கான குடிநீர் விநியோகம் என்பது இரணைமடுகுளத்திலிருந்து கிளிநொச்சிகுளத்திற்கு நீர் பெறப்பட்டு அங்கிருந்து நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் நீர் குடிநீருக்காக பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு தற்போது 14 கிராம அலுவலர் பிரிவுகளில் விநியோகிப்பட்டு வருகின்றன
தற்போது நாள் ஒன்றுக்கு 200 மீற்றர் கீயூப்(200 ஆயிரம் லீற்றர்) நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விநியோகிப்படுகிறது. வருகின்ற மாதம் இது நாளொன்றுக்கு 400 மீற்றர் கீயூப் அளவாக மாறும் எனவும் இவ்வருட இறுதியில் அது ஆயிரம் மீற்றர் கீயூப் அளவாக அதிகரிக்கும் எனவும் இறுதியில் கிளிநொச்சிக்கான குடிநீர் விநியோகப் பணிகள் பூர்த்திசெய்யப்படுகின்ற போது நாளொன்றுக்கு 3800 மீற்றர் கீயூப் அளவாக காணப்படும் எனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த நிலையில் தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக இரணைமடுகுளத்திலிருந்து நாளொன்றுக்கு 200 மீற்றர் கீயூப் நீரை பெற்றுக்கொள்வதற்கு, நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிறுபோக நெற்செய்கைக்கு பின்னரான காலத்தில் கிளிநொச்சிக்கான குடிநீரை இரணைமடுகுளத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கு மிகவும் நெருக்கடி நிலை ஏற்படும் என்றும், குறிப்பாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீரில் மக்கள் முழுமையாக நம்பி வாழுகின்ற நிலை ஏற்படுகின்ற போது அச் சந்தர்ப்பத்தில் இரணைமடுவிலிருந்தும் நீரை போதுமான அளவு பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகுமானால் அது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.