புதிய அரசாங்கத்தை அடுத்த தேர்தலுக்கு முன்னர் அமைப்பதை அடிப்படையாகக்கொண்டு தாம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பாராளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பித்துள்ளதாகவும், கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொஸ்கம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மக்கள் அங்கீகாரமற்ற அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது எனவும் அதனை பதவியிலிருந்து அகற்றி வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்களை விடவும் அதிகமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக்கவுள்ளதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் எனக் கூறிக்கொள்வதற்கு எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதரம் மீதான நம்பிக்கை இழக்கப்படின் அதனை மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் சிரமமான விடயமாகும். மீண்டும் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதாக இருந்தால் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். ஆகவேதான் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்துள்ளனர். மேலும் உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.
ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சி மீது நம்பிக்கைகொள்ள முடியாதென்பதை பிரதிநிதிகளும் அறிந்துகொண்டுள்ளனர். அதனால் தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது நம்பிக்கை வைத்துள்ளனர். சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பிரதியமைச்சர்களும் கையொப்பமிட்டுள்ளனர். பிரதமருக்கு அதிகாரமிருக்குமாயின் அவர்களை பதிவியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும்.
எனவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றியடையச் செய்வதற்கு தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடியுள்ளனர். ஆகவே அடுத்த தேர்தலுக்கு முன்னர் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.