குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காரைநகர் பிரதேச சபையினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது. காரைநகர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்றைய தினம் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிசாளராக விஜயதர்மா கேதீஸ்வரதாசை பிரேரித்தது. சுயேட்சை குழு ஒரு ஒருப்பினரை பிரேரித்தது.
அதனை அடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தமிழரசு கட்சி மூன்று உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சி இரண்டு உறுப்பினர்களும் , ஐக்கிய தேசிய கட்சி இரண்டு உறுப்பினர்களுமாக ஏழு வாக்குகளை பெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் தவிசாளராக தெரிவானார். சுயேட்சை குழு சார்பில் போட்டியிட்ட உறுப்பினருக்கு மூவரே வாக்களித்திருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தெரிவான உறுப்பினர் தான் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என அறிவித்தார்.
அதனை தொடர்ந்து உபதவிசாளர் தெரிவு நடைபெற்றது. அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் பாலசந்திரன் உப தவிசாளராக தெரிவானார். காரைநகர் பிரதேச சபை 11 உறுப்பினர்களை கொண்டது. அதில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கூட்டமைப்பினர் மூன்று உறுப்பினர்களும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி இரண்டு உறுப்பினர்களும் , ஐக்கிய தேசிய கட்சி இரண்டு உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு உறுப்பினர்களும் மற்றும் சுயேட்சை குழு மூன்று உறுப்பினர்களும் தெரிவாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.