இலங்கையில் இன மோதல்களை தவிர்க்க நல்லிணக்கத்துக்கான முயற்சிகள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என இலங்கைக்கான ஐரோப்பிய தூதுவர்கள் குழு ஒன்று கூறியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் துங் லாய் மார்கூ, ருமேனியா தூதுவர் டாக்டர். விக்டர் சியூஜ்டியா மற்றும் சுவிஸ் நாட்டின் தூதுவர் ஹெயின்ஸ் வாக்கர் நெடர்கூர்ன் ஆகியோரே, கண்டியில் அண்மையில் வன்செயல்கள் நடந்த இடங்களுக்கு சென்று பார்வையிட்ட பின்னர் இவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். கண்டி வன்செயல்களில் 3 பேர் பலியானதுடன், வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாசல்கள் என முஸ்லிம்களுக்கு சொந்தமான 200 சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன.
இன, மத வெறுப்புணர்வை கையாளாமல் விட்டுவிடுவதால் ஏற்படக் கூடிய பிரதிவிளைவுகளை இலங்கை போதுமான அளவுக்கு அனுபவித்துவிட்டது என்று கூறியுள்ள இந்தத் தூதுவர்கள், அரசியல், மத மற்றும் சமூகத் தலைவர்கள் வெறுப்புணர்வு பேச்சுக்களை, இனவாதத்தை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். இப்படியான குற்றங்களுக்கு தண்டனை கிடைக்காது என்ற நிலைமை மாற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கண்டியில் பௌத்த பீடத்தலைவர்களை சந்தித்த அந்த தூதுவர்கள், வன்செயல்களை தடுக்க ஏனைய மதங்களின் தலைவர்களுடன் திட்டமிட்ட வகையிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக இலங்கையில் வெறுப்புணர்வூட்டும் பேச்சுக்கள் மற்றும் இன வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், இவ்வாறான விடயங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளனர்.
கண்டியிலும் அம்பாறையிலும் இந்த மாத முற்பகுதியில் நடந்த வன்செயல்களில் வர்த்தக நிலையங்களுக்கும், வீடுகளுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டதுடன், இனப்பதற்றமும் உருவானது. அதனையடுத்து அரசாங்கம் வெறுப்புணர்வை தூண்டுவதாகக் கூறி சமூக ஊடகங்களை தற்காலிகமாக தடை செய்தது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு மார்ச் 18 இல் அது மீண்டும் நீக்கப்பட்டது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 comment
“இன மோதல்களை தவிர்க்க நல்லிணக்கத்துக்கான முயற்சிகள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என இலங்கைக்கான ஐரோப்பிய தூதுவர்கள் குழு ஒன்று கூறியுள்ளது”.
இதற்கு தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் என்ன செய்ய வேண்டும்?
1. நல்லிணக்கம் (Reconciliation) என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும்?
இரண்டு எதிர் நம்பிக்கைகள், கருத்துகள் அல்லது சூழ்நிலைகள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, அகற்றக்கூடிய வேற்றுமைகளை நீக்கி, ஒத்துப்போய், சுமூகமான, இணக்கமான, சமாதானமான, அமைதியான, உறவுகளை ஒன்றாக மீட்டெடுத்து நண்பர்களாகிவிடும் சமரச, ஒன்றிப்புச் செயல்முறை தான் நல்லிணக்கம்.
2. ஒரு ஆரம்பமாக பிரச்சாரக் குழுவை உருவாக்க வேண்டும் (Build a campaign team).
பூர்வீக தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் என்ற ஒவ்வொரு மக்கள் கூட்டத்தையும் தனித்தனியாக பிரதிநிதித்துவம் செய்யும் தன்னார்வத் தொண்டர்களை உள்ளடங்கிய நான்கு உறுப்பினர் கொண்ட பிரச்சாரக் குழுவை உருவாக்குங்கள்.
3. முன்மாதிரியான ஒற்றுமைக்கான ஒரு துவக்க மகாநாட்டை நடத்த வேண்டும்.
பிரச்சாரக் குழு குறிப்பிட்ட மகாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டும். பூர்வீக தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் மற்றும் சிங்கள மக்களின் வரலாறு, சமத்துவ சிந்தனை, வேற்றுமையில் ஒற்றுமை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மற்றும் முகாமைத்துவம் பற்றி தெரிந்தவர்களை, முடிந்தால் முதலில் ஒரு வானொலியில் பேச வைத்து, பின்பு மகாநாட்டில் பேச வைக்க வேண்டும்.
மகாநாட்டில் பேசுவதற்கான 4 தலைப்புகள்:
4. உண்மையான வரலாற்றை (History) தெரிய வைக்க வேண்டும்.
பூர்வீக தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் என்ற ஒவ்வொரு மக்கள் கூட்டத்தின் உண்மையான வரலாற்றை கூறுங்கள். இந்த மக்கள் எல்லோரும் எப்பொழுது இலங்கைக்கு வந்தார்கள்? அவர்களின் பூர்விகம் என்ன? எப்பொழுது ஆட்சி செய்தார்கள்? மற்றும் இப்பொழுது என்ன செய்கின்றார்கள்? என்பதைப்பற்றி பேசுங்கள். உண்மையான வரலாற்றை உறுதி செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
5. சமத்துவ சிந்தனையை (Thoughts) உருவாக்க வேண்டும்.
பேரினவாத சிந்தனை (chauvinistic thinking) மற்றும் மேலாதிக்க சிந்தனையை (hegemonic thinking) நீக்கி சமத்துவ சிந்தனையை உருவாக்கப் பேசுங்கள்.
6. வேற்றுமையில் ஒற்றுமையைக் காண வேண்டும் (Find unity in diversity).
பூர்வீக தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் மற்றும் சிங்கள மக்களுடைய வாழ்க்கை முறையின் முக்கிய கூறுகளாகிய சின்னம் (Symbol), மொழி (Language), விழுமியம் (Values), நம்பிக்கை (Belief), வரைமுறைகள் (Norms), நடைமுறை (Commonly accepted practices), வழக்கம் (Customs), பழக்கம் (Habits), நல்லொழுக்கம் – நன்னடத்தை (Moral & ethical behaviour), தனி மனித நெறிகள் (Individual human morality – Mores), ஓழுக்கக் கேடு (Impermissible immoral behaviour), விதி (Rule), சட்டம் (Law), எதிர்பார்ப்பு (Expectation), அறிவு (Knowledge), திறன் (Skill), பங்கு (Role), ஆக்கப் பொருள் (Artefacts), ஓவியம் (Painting), மற்றும் சிற்பம் (Sculpture) என்பவற்றில் உள்ள வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமைகள் முதலியவற்றைத் தெரிந்து, ஏற்று, மதித்து எப்படி வாழ்வது பற்றி பேசுங்கள்.
7. UNHRC தீர்மானங்களை அமுல்படுத்தி வைக்க வேண்டும்.
2015ம் ஆண்டு உலக நாடுகள் பல ஓன்று சேர்ந்து தமிழர்களுடனும் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடனும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களை எடுத்தார்கள். இந்த தீர்மானங்களின் நோக்கம் என்னவென்றால் “இலங்கையின் முழு மக்களின் அனைத்து மனித உரிமைகளாலும் மற்றும் அடிப்படை சுதந்திரங்களாலும் வரும் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதை உறுதி செய்வதாகும் “. இந்த நோக்கத்தை அடைய 6 இலக்குகள் உள்ளது. அவை யாவது குற்றவியல் விசாரணைக்கு தயார் செய்யுங்கள். உண்மையைத் தேடி, பொறுப்புக் கூறி, நீதி வழங்குங்கள். இழப்பீடுகளைக் கொடுங்கள். கொடூர குற்றங்களை மீண்டும் செய்யாது தடுங்கள். நல்லிணக்கத்தை உருவாக்குங்கள் மற்றும் மனித உரிமைகளை அமுல்படுத்துங்கள். இந்த இலக்குகளை அடையத் தேவைப்படும் பணிகளைப் பற்றி பேசுங்கள்.
மேலே குறிப்பிட்ட மகாநாட்டை இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் தொடர்ச்சியாக நடத்தினால் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கி வளர்க்க முடியும். இதற்கான அரச விழிப்புணர்வையும் தூண்டுதலையும் பிரச்சாரக் குழுவும் மற்றும் 9 மாகாண முதல் அமைச்சர்களும் சேர்ந்து செய்ய வேண்டும்.