இலங்கை பிரதான செய்திகள்

ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

“யாழ்ப்பாணம் மாநகர சபையைப் பெயர் சொல்லும் சபையாக மாற்றியமைக்க வேண்டுமென்றும், நிர்வாகம் திறம்பட செயற்படுத்தப்பட வேண்டுமென்றும் முதலமைச்சர் மாநகர முதல்வருக்கு அறிவுரை வழங்கியிருப்பது, “ஊருக்கு உபதேசம், உனக்கில்லையடி” என்ற பழமொழி போல் உள்ளது என வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,

“கடந்த நான்கரை ஆண்டுகளாக வடக்கு மாகாண சபையை வினைத்திறனற்ற ஓர் மாகாண சபையாக நிர்வகித்து வரும் முதலமைச்சர் மாநகர சபையை திறம்படச் செயற்படுத்த வேண்டுமென்று கோரியிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

மாகாண சபை உறுப்பினர்களால் அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட நிதி மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகம், பாரபட்சம், ஊழல் மற்றும் ஒழுக்க ரீதியான குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதலமைச்சரால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு பல்வேறு அதிகாரத் துஸ்பிரயோகங்களை சுட்டிக்காட்டியிருந்தும், நிதிக் கையாடல்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளுக்குப் பரிந்துரைகள் செய்திருந்தும், அவைகள் தொடர்பாக கடந்த 9 மாதங்களாக எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமல், வடமாகாண சபையை ஓர் கேலிக்கூத்தாக்கியிருக்கும் முதலமைச்சர், மாநகர சபையைப் பெயர் சொல்லும் சபையாக மாற்றி அமைக்கக் கோரியிருப்பது நகைப்பிற்குரியதே.

அவ் விசாரணைக் குழு அறிக்கையில் ஒரு அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரணையின் போது சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட விதத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், நிதி மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் தொடர் விசாரணை செய்வதற்கு விதந்துரைக்கப்பட்டிருந்தும், எவ்வித தொடர் விசாரணையினையும் செய்யாமல் அக் குறிப்பிட்ட முந்நாள் அமைச்சரினால் ஆரம்பிக்கப்பட்ட “தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின்” காரியாலயத்தை முன்னின்று திறந்து வைத்து விட்டு, யாழ் மாநகர சபையில் ஈ.பி.டி.பி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்க வேண்டுமென்று கோரியிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல்.

அது மட்டுமல்ல, யாழ் மாநகர சபையில் ஈ.பி.டி.பி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க முதலமைச்சரினால் அமைக்கப்பட்ட கந்தையா அரியநாயகம் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி வசந்தசேனன் ஆகியோரின் விசாரணை அறிக்கைகள் முறையே 2015 ஜனவரி, ஒக்ரோபர் மாதங்களில் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் அவ் அறிக்கைகளைச் சபைக்குச் சமர்ப்பிக்கும்படி மாகாண சபை உறுப்பினர்களால்  பல முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தும், இதுவரை சபைக்குச் சமர்ப்பிக்காமல் இருந்து விட்டு இப்போது மாநகர சபை முதல்வரை விசாரணை நடாத்துமாறு கோரியிருப்பது இன்னொரு கேலிக் கூத்தாகவே கருத வேண்டியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.