கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு, தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்த வலிகாமம் தெற்கு மற்றும் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கி, அவர்களின் வெற்றிடத்திற்கு வேறு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி அறிவித்துள்ளார்.
இன்று(30) அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்
ஏற்கனவே எமது அணி உருவாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் சம்மந்தமாக நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் மூலமாகவும், எமது அணியைச் சார்ந்த அனைத்து உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் தெளிவாக தெரிவிக்கப்பட்டது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்ககூடாது என்றும் எடுத்துக் கூறப்பட்டது.
அதனையும் மீறி மேற்படி இரண்டு சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கட்சிக்கு விரோதமாக செயற்பட்டுள்ளார்கள். எனவே அவர்களை நீக்கிவிட்டு வெகு விரைவில் அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு காரணம் தமிழரசுக் கட்சி உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதாலேயே, அதற்கு மாற்று அணியாக உதயசூரியன் சின்னத்தில் பல அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்டன. இந்த நிலையில் கூட்டணியில் வெற்றிபெற்று, தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இதை நன்கு அறிந்திருந்தும் இவ்வாறு செயற்படுபவர்களை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நடைபெறவிருக்கும் ஏனைய உள்ளுராட்சி மன்ற தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவுகளில் எமது கட்சியின் உறுப்பினர்கள் எவரும் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்கு வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மீறினால் அவர்கள் மீதும் இவ்வாறான நடவடிக்கைகளே மேற்கொள்ள நேரிடும் என்பதனை தெரிவத்துக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.