இந்தியா முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகள் 600 சதவீதத்திற்கும் அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டு நிரம்பி வழிவது துரதிருஷ்டவசமானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறும் உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் உள்ள 1300 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை குறித்து உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில் விவரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 150 முதல் 609 சதவீதம் வரை கூடுதலாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மீது தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிறைக் கைதிகளுக்கும் மனித உரிமை உண்டு. அவர்களை விலங்குகளைப் போல் அடைத்து வைப்பதை அனுமதிக்க முடியாது. இப்படி அடைத்து வைத்தால் சிறை சீர்திருத்தத்தை எப்படி அமுல்படுத்த முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் முறையாக அடைத்து வைக்க முடியாவிட்டால், அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடடன் இது குறித்த புதிய செயல்திட்டம் குறித்து மாநில அரசுகள் 2 வாரங்களுக்குள் தங்கள் கருத்துகளை தாக்கல் செய்ய வேண்டும். அதற்குள் தாக்கல் செய்யாவிட்டால், புதிய செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக கருதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.