யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு வருகின்ற தமிழ் – சிங்கள புத்தாண்டு பரிசாக பெருந்தொகை நிலத்தை விடுவித்து கொடுக்க உள்ளனர் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்க பிரதிநிதிகளை பலாலி தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை காலை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் – சிங்கள புத்தாண்டை ஒட்டி பெருந்தொகை நிலத்தை விடுவித்து தருவதற்கு உரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றோம். தேசிய பாதுகாப்பு, பொதுமக்களின் நலன் ஆகிய இரு அம்சங்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்னெடுப்புகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
நிலங்களை நாங்கள் பிடித்து வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் எமக்கு ஆசை கிடையாது. மக்களின் நிலம் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்துக்கும் இடம் இல்லை. இருப்பினும் தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தியே நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அற்ற வகையில் நிலங்களை விடுவித்து கொடுப்பதற்கான அணுகுமுறைகளை கைக்கொள்கின்றோம்.” எனத் தெரிவித்துள்ளார்.