சார்க் நாடுகளின் தொற்றாத நோய்கள் தொடர்பான முதலாவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (31) முற்பகல் கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் ஆரம்பமானது. தொற்றாத நோய்களை கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கொள்கைகள் குறித்தும் சார்க் நாடுகளுக்கிடையே அனுபவங்களை பரிமாறிக்கொள்ளுதல் தொடர்பாக இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளதுடன், இம்மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறுகின்றது.
மரபணு, உடல் மற்றும் சுற்றாடல் காரணிகளின் காரணமாக உருவாகும் நோய் நிலைமைகளான தொற்றாத நோய்களை குறைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இவற்றில் இருதய நோய், புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட முக்கிய தொற்றாத நோய்களினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது குறைந்த மற்றும் மத்திய தர வருமானம் பெறும் நாடுகளாகும். உலகெங்கிலும் வருடாந்தம் சுமார் 10 மில்லியன் பேர் தொற்றாத நோய்களுக்கு ஆளாவதுடன், புகையிலை பாவனை, உடற் பயிற்சிகள் செய்யாமை, உணவில் கவனமில்லாமல் இருத்தல், போதைப்பொருள் பாவனை போன்றவை தொற்றாத நோய்கள் ஏற்பட பெரிதும் காரணமாக அமைகின்றன.
தொற்றாத நோய்கள் பேண்தகு அபிவிருத்தி இலக்கை வெற்றிகொள்வதற்கு தடையாக உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அடையாளப்படுத்தியுள்ளது. அந்த வகையில் 2030 ஆம் ஆண்டாகும் போது தொற்றாத நோய்களை கட்டுப்படுத்துவதற்காக திட்டமிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் உலகெங்கிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளதுடன், அவை ஏனைய நாடுகளுக்கும் முன்னுதாரணமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதி அமைச்சர் பைசால் காசிம், அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச மற்றும் சார்க் செயலகத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.