நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று சனிக்கிழமை (31.03.18) காலை 10 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்திற்கு சென்றார். அங்கு அம்மாச்சி உணவகத்தில் உணவு வகைகளை சுவைத்த அமைச்சர், இடம்பெறும் பணிகளை நேரில் பார்வையிட்டதுடன், பணியாளர்களுடனும் உரையாடி, குறை நிறைகளையும் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர், கூட்டுறவாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது கூட்டுறவு சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பிலும், சங்கத்தின் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பிலும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
இதன் பின் ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், ‘சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் இன்று நேரில் பார்வையிட்டமை மகிழ்ச்சியைத் தருவதுடன், அவர்களது முயற்சியையும் பாராட்டுகின்றேன். இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுப்பதற்கு ஆவன செய்வேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.