பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து, தமது பாராளுமன்ற குழு கூடி தீர்மானம் எடுக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இன்று (31) யாழ்ப்பாணத்தில் வைத்து இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்து வெளியிட்ட அவர், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுமானால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவில் இது தொடர்பில் விவாதிக்கப்படும் என்பதே பதிலாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைவாக எதிர்வரும் 02 அல்லது 03ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு அது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் எனக் கூறிய மாவை சேனாதிராஜா, அதற்கு முன்னதாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சில விடயங்கள் குறித்து கலந்துரையாட வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.