குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால சபாநாயகர் ஆசனத்தில் அமரக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எதிர்வரும் 4ம் திகதி பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது. இந்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பின் போது சபாநாயகர் ஆசனத்தில் திலங்க சுமதிபால அமரக் கூடாது எனவும் அவ்வாறு அமர்ந்தால் பாராளுமன்றிலிருந்து வெளிநடப்புச் செய்ய நேரிடும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் சிரேஸ் தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியல்ல இது குறித்து ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். பிரதி சபாநாயகரின் உறவினர்களுக்கு சொந்தமான பத்திரிகையில் பிரதமருக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகவும், பிரதமருக்கு எதிராக திலங்க சுமதிபால நேரடியாகவே குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் திலங்க சுமதிபால சபாநாயகர் ஆசனத்தில் அமர்வது பக்கச்சார்பற்ற தன்மை உறுதி செய்யாது என குறிப்பிட்டுள்ளார்.