உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப்ரல் 3-ம் திகதி கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பில் கர்நாடக அரசும், மத்திய அரசும் கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தை ஏமாற்றி வந்துள்ளன.
இந்நிலையில், இறுதியாக காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு அமைத்து அறிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது. அந்த காலக்கெடு கடந்த 29-ம் திகதியுடன் முடிவடைந்த போதும் உச்ச நீதிமன்ற உத்தரவு இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
எனவே, காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 3-ம் திகதிதமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்தின் நீராதாரப் பிரச்சினை என்பதால் அரசியல் சார்பற்று அனைத்து கட்சியினர், பொதுநல அமைப்புகள் என அனைவரும் இந்த கடையடைப்புப் போராட்டத்தில் பங்கேற்று தமிழக நலன்காக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது