குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆட்சி அதிகாரம் வேறு ஒரு கட்சியிடம் இருப்பதால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் இம்முறை உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கம்பஹா, எம்பிலிப்பிட்டிய, கொலன்ன, கடுவன, அங்குகொலபெலஸ்ஸ உட்பட சில உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் நேற்று கால்டன் இல்லத்தில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.
அங்கு கருத்து வெளியிடும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
பிரதேச சபை தலைவர் பதவி நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவி. இதனால், அவரது பணிகள் நியாயமாக இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதேபோல் நாட்டு மக்களும் நாம் எப்படி பணியாற்ற போகிறோம் என்பதை பார்த்துக்கொண்டுள்ளனர். அதிகாரம் இன்னுமொரு தரப்பிடம் உள்ளது. கடந்த காலத்தில் உப தவிசாளராக பதவியேற்க வருமாறு கூறும் போது, நான் இப்போது மக்கள் பிரதிநிதி எனக்கு தேவையான நேரத்தில்தான் வருவேன் என்று கூறியவர்களும் உண்டு. நன்றாக குடித்து விட்டு அப்படி கூறினர். அவர் தகுதியற்றவர் என்பது எமக்கு தெளிவாக தெரிந்தது. தமது பலத்தின் காரணமாகவே வென்றோம் என நினைத்தால் அது தவறு. கட்சிக்குள் வரவிட்டால் கட்சியில்லை. கட்சிக்கு வராத சந்திரிக்காவுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.