பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்காலம் பற்றி சிந்தித்து SLMC தீர்மானம் எடுக்கும்…
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்காலம் பற்றி சிந்தித்து தீர்மானம் ஒன்றை எடுக்கும் என அதன் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் எமக்கும் அநீதிகள் இழைக்கப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதிலும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சியை சேர்ந்த சேர்ந்த இரண்டு பேர் பிரதேச சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் தெரிவு செய்த அரசாங்கத்தின் தலைவர்கள் எம்மை செல்லாத காசு என்ற நிலைமைக்கு தள்ளியுள்ளனர். எது எப்படி இருந்த போதிலும் அரசியல் முடிவுகளை எடுக்கும் போது அவசரப்பட போவதில்லை. மக்களின் ஆணையை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதா இல்லையா 3 ஆம் திகதி இறுதி முடிவு
பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 3 ஆம் திகதி இறுதி முடிவை எடுக்க உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து தமது கட்சி இதுவரை தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை எனவும் எதிர்வரும் 3 ஆம் திகதி கட்சியின் அரசியல் சபை கூடி தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மன்னாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக சென்றிருந்த காரணத்தினால், கடந்த 29 ஆம் திகதி அலரி மாளிகையில் நடந்த ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்தில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.