குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிறையில் உள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது சம்பந்தமாக தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதியாக தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கிளிநொச்சியை சேர்ந்த ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியல் கைதிகள் குறித்து தான் கடந்த 26 ஆம் திகதி ஜனாதிபதியுடன் பேசியதாகவும் இதன் போது பொதுவாக அரசியல் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதி கருத்து வெளியிட்டதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.
பொது மன்னிப்பின் கீழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அனைத்து அரசியல் கைதிகள் தொடர்பாகவும் தனித்தனியாக அறிக்கை கோரிய போதிலும் இதுவரை அந்த அறிக்கைகள் தனக்கு கிடைக்கவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
1 comment
பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகளை விடுவிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அரசியல் கைதிகள் தொடர்பாகத் தனித்தனியாக அறிக்கை கோரிய போதிலும் இதுவரை அந்த அறிக்கைகள் எனக்குக் கிடைக்கவில்லை, என்று ஜனாதிபதி கூறியிருப்பதன் மூலம் இவர் யார் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கின்றார்? இது போன்றதொரு பதிலை இவரிடம் யாரும் எதிர்பார்க்கவில்லை. அரசியல் கைதிகள் தொடர்பான ஜனாதிபதியின் கூற்றானது, அவரின் அசமந்தப் போக்கையே வெளிப்படுத்துகின்றது.