குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கரவெட்டிப் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பு கைப்பற்றியது. தவிசாளராக தங்கவேலாயுதம் ஐங்கரனும் , பிரதித் தவிசாளராக கந்தர் பொன்னையாவும் தேர்வாகினர்.
கரவெட்டிப் பிரதேசசபையின் முதலாவது அமர்வு இன்றைய தினம் (03) உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது. அதன் போது தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்கவேலாயுதம் ஐங்கரனை பிரேரித்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சதாசிவம் இராமநாதனைப் பிரேரித்தது.
இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதா என கோரப்பட்ட போது பகிரங்க வாக்கெடுப்புபினை 11 உறுப்பினர்களும் இரகசிய வாக்கெடுப்பினை 10 உறுப்பினர்களும் கோரினர்.
அதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும் தங்கவேலாயுதம் ஐங்கரனுக்கு வாக்களித்தனர். ஈழமக்கள் ஜனநாய கட்சியின் மூன்று உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு உறுப்பினரும் சதாசிவம் இராமநாதனுக்கு வாக்களித்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏழு உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூன்று உறுப்பினரும் நடுநிலமை வகித்தனர். இதனையடுத்து உப தவிசாளர் தெரிவின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கந்தர் பொன்னையாவை கூட்டமைப்பினர் பிரேரித்தனர். வேறு யாரும் உபதவிசாளராக பிரேரிக்கப்படாத நிலையில் போட்டியின்றி தெரிவானார்.