குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். வடமராட்சி, பருத்தித்துறை பிரதேச சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபைக்கான தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகள் இன்று பிற்பகல் பிரதேச சபை மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அரியரத்தினம் சார்ள்ஸ் அரியகுமார் பிரேரிக்கப்பட்டார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கிருஷ்ணபிள்ளை ஜெயபாலன் பிரேரிக்கப்பட்டார். இவ்விருவருக்கிடையில் பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பிரேரிக்கப்பட்ட அரியகுமார் 13 வாக்குகளை பெற்று தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஜெயபாலன் 4 வாக்குகளை மட்டும் பெற்றார்.
தமிழர் விடுதலை கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அதைத்தொடர்ந்து இடம்பெற்ற உப தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பிரேரிக்கப்பட்ட பாலசிங்கம் தினேஷ் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
21 உறுப்பினர்களைக் கொண்ட பருத்தித்துறை பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 உறுப்பினர்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 4 உறுப்பினர்களையும், ஈ.பி.டி.பி. 3 உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 2 உறுப்பினர்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 2 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஓர் உறுப்பினரையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஓர் உறுப்பினரையும் கொண்டுள்ளது.