குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஐ.தே.கவில் பாரிய மாற்றங்கள் செய்யப்படும்….
ஐக்கிய தேசியக் கட்சியில் பாரிய மாற்றங்கள் செய்யப்படும் என ராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் பின்னர் கட்சியில் பாரியளவில் மாற்றங்கள் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்து வெகு விரைவில் கட்சியில் மாற்றங்கள் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ள அவர், அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கவின் பொறுப்புகள் புதிய குழுவிடம் ஒப்படைக்கப்படும் – பிரதமர்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்புக்கள் புதிய குழுவொன்றிடம் ஒப்படைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் கட்சியில் அடிப்படை மாற்றங்கள் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ள அவர், கட்சியின் முக்கிய பொறுப்புக்கள் புதிய குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் 8ம் மற்றும் 9ம் திகதிகளில் இந்த விடயம் தொடர்பில் கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஜனாதிபதி சுயாதீனமாக செயற்படுவார் – அகில விராஜ்…
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நாளைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, ஜனாதிபதி சுயாதீனமாக செயற்படுவார் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர, அர்ஜூன ரணதுங்க, ராஜித சேனாரட்ன மற்றும் தாம் ஜனாதிபதியை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டதாக அகில தெரிவித்துள்ளார்.