குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இராணுவத்திடம் இருந்து துப்பாக்கியைப் பறித்துச் சென்றனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.
வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சிகளான இராணுவத்தினரும், மூன்றாம் நான்காம் சாட்சிகளாக வனவளப் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்களும் சந்தேக நபர்கள் மூவரையும் நீதி பதி முன்னிலையில் அடையாளம் காட்டினர். சந்தேநகர்கள் மூவரையும் எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
பின்னணி
முல்லைத்தீவு ஆண்டான்குளத்தில் கடந்த 26ஆம் திகதி மரம் கடத்தப்படுகின்றது என்று இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. வனவளப் பாதுகாப்புப் பிரிவு இந்தத் தகவலை வழங்கியிருந்தது. இராணுவத்தினர் வீதிச் சோதனையில் ஈடுபட்டனர்.
மரங்களுடன் வந்த வாகனம் ஒன்றை மறித்துச் சோதனையிட்டுள்ளனர். வாகனத்தில் வந்தவர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாகனத்தில் வந்த இருவரும் இராணுவத்தினரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு காட்டுப் பகுதிக்குள் ஓடித் தப்பினர் என்று தெரிவிக்கப்பட்டது.
27ஆம் திகதி பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தினர். சிலரிடம் விசாரணை நடத்தியதில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தியவிசாரணைகளில் துப்பாக்கி மதகின் கீழ் இருந்து மீட்கப்பட்டது. எனினும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை.
பிரதான சந்தேகநபர் தேடப்பட்டுவந்த நிலையில் அவர் 28ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்தார்.
இராணுவத்தினரின் பணிக்கு இடையூறு விளைவித்தமை, ஆயுதத்தைப் பறித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.