குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலி கிழக்கு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. வலி கிழக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இன்று (04) புதன்கிழமை பிற்பகல் 02 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது. தவிசாளர் தெரிவுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தியாகராசா நிரோஸ் இனையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சண்முகராஜா ஸ்ரீகுமரனையும் பிரேரித்தது.
தவிசாளர் தெரிவு பகிரங்கமாகவாக இரகசியமாகவா நடத்தப்படவேண்டும் என உறுப்பினர்களிடம் கோரப்பட்டபோது பகிரங்க வாக்கெடுப்பாக நடத்தப்படவேண்டும் என 34 உறுப்பினர்கள் கோரினர். இரகசிய வாக்கெடுப்பாக நடத்தப்படவேண்டும் என எவரும் கோரவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இந்நிலையில் 38 உறுப்பினர்களை கொண்ட சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் ஈபிடிபியின் 06 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 03 உறுப்பினர்களுமாக 24 உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான தியாகராசா நிரோஸ்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 06 உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரேரித்திருந்த சண்முகராஜா ஸ்ரீகுமரனுக்கு வாக்களித்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் 03 உறுப்பினர்களும் சுயேட்சைக் குழுவின் ழு4 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான சி.நவபாலன் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான ம.கபிலன் உப தவிசாளராக போட்டியின்றி தெரிவானார்.