2ஆம் இணைப்பு – பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. இதில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 76 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 122 வாக்குகள் அளிக்கப்பட்டன. 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, 46 மேலதிக வாக்குகளினால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. போன்ற கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இவர்களைத் தவிர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்கள் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, சமுர்த்தி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, ஜோன் அமரதுங்க, சுதாசனி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட சில அமைச்சர்கள் பிரதமருக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜே.வி.பி கட்சியும் எதிராகவே வாக்களித்திருந்தது. மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுக்கு உதவியமை உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிகொண்டார். 122 வாக்குகளைப்பெற்று பாரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிகொண்டுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும், சிறீலங்கா முஸ்லீம்காங்கிரஸ் கட்சியினர், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணியினர் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் பிரேரணைன்னு எதிராக வாக்களித்துள்ளனர். 76 வாக்குகள் ஆதரவாக கிடைத்தன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மற்றும் சிறீலங்கா சதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 26 பேர் கலந்துகொள்ளவில்லை.
பாராளுமன்றம் நாளை காலை மீண்டும் கூடுகிறது. புதிய அமைச்சரவையா? அமைச்சரவையில் மாற்றமா? நல்லிணக்க அரசாங்கத்தின் தொடர்ச்சியா? என்பது குறித்து நாளை தெரியவரும் என அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.