நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சகல வசதிகளையும் கொண்ட கட்டிடத் தொகுதி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமையினால் நிதி பற்றாக்குறை மற்றும் ஏனைய காரணங்களினால் மன்னாருக்கான திட்டம் கைவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த திட்டத்தை மீளவும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தொடர்பான அவசர கலந்துரையாடல் நேற்று புதன் கிழமை(5) மாலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில்,வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், நெதர்லாந்து நாட்டின் வமேற் ( vamed) நிறுவனத்தின் பிரதி நிதிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அறுவைச்சிகிச்சை கூடம்,அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவ ஆய்வு கூடம் என்பன அடங்கிய தொகுதி ஒன்றை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. -நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடன் வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் குறித்த திட்டம் அமுல் படுத்த நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இறுதி நேரத்தில் நிதி பற்றாக்குறை மற்றும் ஏனைய காரணங்களினால் மன்னாருக்கான திட்டம் மாத்திரம் கை விடப்பட்டிருந்தது.
எனினும் குறித்த திட்டத்தை மீளவும் மன்னாருக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது குறித்த கலந்துரையாடலில் வருகை தந்த அதிகாரிகளிடனும் குறிப்பாக நெதர்லாந்தின் வமேற் (vamed) நிறுவனத்தின் பிரதி நிதிகளுடனும் அமைச்சர் தலைமையில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் மன்னார் மாவட்டத்தில் நிலமையை கருத்தில் கொண்டும் மாவட்ட வைத்தியசாலையில் நலனை கருத்தில் கொண்டும் நிதியை பெற்று குறித்த திட்டத்தை ஆராம்பிப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன் போது ஒஸ்ரியா நாட்டிடம் நிதி உதவி அல்லது கடனைப் பெற்று குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், மத்திய அரசின் அனுமதியுடன் குறித்த நிதியைப் பெற்று சகல வசதிகளினூடான குறித்த திட்டத்தை மன்னார் மாவட்ட வைத்திய சாலையில் நடமுறைப்படுத்துவது தொடர்பிலும்,குறித்த திட்டத்தை வெற்றிகரமான பூர்த்தி செய்ய சுமார் 1700 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000