குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வசமாகியுள்ளது. இன்று(05) பிற்பகல் இரண்டு மணிக்கு பச்சிலைப் பள்ளி பிரதேச சபை மண்டபத்தில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.
முன்னதாக தவிசாளர் தெரிவுக்கு கோரப்பட்டபோது இலங்கை தமிழரசு கட்சியின் சுப்பிரமணியம் சுரேன் தெரிவு செய்யப்பட்டார். மாற்றுத் தெரிவுகள் இருக்கிறதா என உள்ளுராட்சி ஆணையாளர் வினவிய போது கேடயச் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேச்சைக் குழுவின் உறுப்பினர் ஈஸ்வரன் டயாழினி குறித்த தலைவர் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்திக்கும், மக்களின் நலன்களுக்கும் பொருத்தமற்றவர் எனவே தங்களது சுயேச்சை குழுவின் நான்கு உறுப்பினர்களும் குறித்த தெரிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிவித்தார்.
பின்னர் ஏனையத் தெரிவுகள் இல்லாத நிலையில் சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சி உறுப்பினர்களும் தவிசாளர் தெரிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத காரணத்தினால் சுப்பிரமணியம் சுரேன் பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து உப தவிசாளர் தெரிவிலும் போட்டியின்றி தமிழரசுக் கட்சியின் முத்துகுமார் கஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்