குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
புதிய முகங்களை முன்னிலைக்கு கொண்டு வந்து எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் தேசிய தேர்தலுக்காக கட்சியை தயார்ப்படுத்த போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்த பின்னர் நேற்று கட்சியின் தலைமையமாக சிறிகொத்தவில் கட்சியினரை சந்தித்து அவர்களுடன் தேனீர் விருந்தில் கலந்துக்கொண்ட போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எமக்கு அமோக வெற்றி கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். 40க்கும் மேற்பட்ட வாக்குகள் எமக்கு மேலதிகமாக கிடைத்தன. நாட்டுக்கும், அரசாங்கத்திற்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. இதனால், இதனை தோற்கடிக்க உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது புதிய பயணத்திற்கு தயாராகின்றோம். இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் அனைவருடனும் இணைந்து நாம் இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு தினங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்மானங்களை எடுத்து, ஐக்கிய தேசியக்கட்சியின் முழுமையான மறுசீரமைப்பை மேற்கொள்வோம். புதிய முகங்களை கொண்டு வந்து 2020 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வோம். வலுவான முறையில் இந்த பயணத்தை முன்னோக்கி செல்லாம் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.