குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி வகித்து கொண்டு பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களித்தன் மூலம் தற்போது அரசாங்கத்திற்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் பிரதமருக்கு எதிரான வாக்களித்தமை இதுவே முதல் முறையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தினேஷ் குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டு அரசியலில் தற்போது பரப்பரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சி என்ற வகையில் நாட்டில் நடந்த பாரிய நிதி மோசடி காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பெரிய நெருக்கடி குறித்தும் நாங்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்தோம். இதற்கு எதிராகவே நாங்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தோம்.
இந்த போராட்டத்தை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்போம். நாட்டின் நிதி முறைமை, பொருளாதார முறைமை என்பன குறித்து சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையால், நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பிடித்து தொங்கி கொண்டிருக்கலாம். ஆனால், நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றால், நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. அடுத்த வாரமளவில் ஏற்பட போகும் பொருளாதார சிக்கலுக்கு அரசாங்கத்திடம் தீர்வு எதுவுமில்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இருந்து பிரதமரை தப்ப வைத்தது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்பது இரகசியமானதல்ல. அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து பிரதமரிடம் உறுதிமொழிகளை பெற்று நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்த்து வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் தெளிவாக கூறிக்கொள்கிறோம். சபாநாயகர் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கவேண்டும். இதனை செய்யுமாறு நாங்கள் சபாநாயகரை வலியுறுத்துகிறோம் என தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.