தமிழர்களை பொறுத்த வரையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக 98 ஆசனங்களை பெற்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இரண்டாவது மிக பெரிய அரசியல் சக்தியாக பரிணமித்து நிற்கின்றது என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சி முக்கியஸ்தரும், அக்கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்ற இவர் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசியபோது,
“உள்ளூராட்சி தேர்தல் என்பது அபிவிருத்தியை நோக்கிய தேர்தல் ஆகும். எம்மை பொறுத்த வரையில் நாம் மூன்று கோஷங்களை மக்கள் முன்னிலைக்கு வைத்திருந்தோம். வட்டாரங்களின் அபிவிருத்தி, பிரதேசங்களின் அபிவிருத்தி, அரசியல் பிரச்சினைக்கான தீர்வு முயற்சி ஆகியனவே அவையாகும்.
உள்ளூராட்சி தேர்தல் அபிவிருத்தியோடு தொடர்புபட்டதாக இருப்பினும்கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன வழக்கம் போலவே தேசியம், அதிதீவிர தேசியம் பேசினார்கள். இவற்றுக்கு இடையில்தான் யாழ். மாவட்டத்தில் 81 வட்டாரங்களை நாங்கள் வெற்றி பெற்று இருக்கின்றோம். இதே எண்ணிக்கையில்தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஆசனங்களை பெற்றிருக்கின்றது. ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக 98 ஆசனங்களை பெற்று எமது கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது.
மேலும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சிக்கு கிடைத்து இருந்த வாக்குகளை விட குறைந்தது மூன்று மடங்கு வாக்கு பலம் எமக்கு தற்போது இருப்பது கடந்த உள்ளூராட்சி தேர்தலில் நிரூபணம் ஆகி உள்ளது. இதை மாற்று கட்சியினரும் ஒப்பு கொண்டு உள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மக்கள் நலன் சார்ந்த பொது வேலை திட்டங்களை முன்னெடுக்கின்றது என்று எமது மக்கள் விசுவாசிக்கின்றமையே இம்மகத்தான வெற்றிக்கு காரணம் ஆகும். இவ்விசுவாசத்துக்கு ஏற்ற வகையில் நாங்கள் தொடர்ந்து செயற்படுவோம்.
எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக விளங்கியபோது எவ்வளவோ உதவிகள் எமது மக்களுக்கு கிடைத்த வண்ணம் இருந்தன. எமது மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், வாழ்க்கை தரம், தொழில் துறை மேம்பாடு ஆகியவற்றுக்காக அவர் பெரிதும் பாடுபட்டார். ஆனால் அவர் அமைச்சராக இல்லாத கடந்த இரு வருட காலத்தில் எந்தவொரு அபிவிருத்தியும் சரி, வேலை வாய்ப்பும் சரி எமது மக்களுக்கு கிடைக்கவே இல்லை. ஆகவே எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் இணக்க அரசியலுக்கான அங்கீகாரத்தை மீண்டும் எமது மக்கள் வழங்கி உள்ளனர் என்பதையே நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் எமக்கு கிடைத்து உள்ள மகத்தான வெற்றி காட்டி நிற்கின்றது என்றே ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நம்புகின்றது.
யாழ். மாநகர சபையை பொறுத்த வரை திண்ம கழிவுகளை அகற்றுதல், வடிகால்களை கட்டமைத்து கழிவகற்றும் வேலைகளை ஒழுங்குபடுத்துதல், சுகாதார சேவைகள் குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ வசதிகள் போன்றவற்றை முன்னுரிமை கொடுத்து மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு எம்மால் முடிந்தவற்றை செய்து கொடுப்போம்.”