இந்தியப் பாராளுமன்றத்தில் வரவுசெலவு திட்ட கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு அதிகமான நேரங்களில் முடங்கியே காணப்பட்டுள்ளத. இந்த நிலையில் 250 மணி நேரங்கள் அங்கு வீணடிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மார்ச் 5ஆம் திகதி இந்தியப் பாராளுமன்ற வரவு செலவு திட்ட விவாத கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கூடியது. திட்டம் தாக்கல் செய்யப்பட்ட முதல் அமர்வு அமைதியாக நடந்த நிலையில், இரண்டாவது அமர்வு பெரும்பாலான நேரத்தில் கூச்சல், குழப்பத்திலேயே இடம்பெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி ஆந்திர நாடாளுமன்ற உறுப்பினர்கள் , பஞ்சாப் நஷனல் வங்கி உள்ளிட்ட வங்கி முறைகேடு தொடர்பில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வை.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்துடன் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு கோரிக்கை விடுத்தது.
நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமா என எதிர்பார்த்து கூட்டத்தொடர் முடிவடைந்தது. அத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினமும் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக, கோரிக்கை குறிப்புரையை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்களவை சபாநாயகர் அறிவித்தார்.
இதனால், மத்திய அரசை காப்பாற்றுவதற்காகவே அ.தி.மு.க. அவையை முடக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 22 நாட்கள் ஒத்திவைப்பதற்காகவே நடந்த இரு அவைகளும் இன்று தேதி குறிப்பிடப்படாமலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அவை எத்தனை மணி நேரம் ஒழுங்காக நடந்தது, எத்தனை கேள்விகளுக்கு மந்திரிகள் பதில் அளித்துள்ளனர் என்ற தகவலை பாராளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ளது.
மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மந்திரிகள் நேரடியாக பதிலளித்துள்ளனர். மற்ற கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில் அளிக்கப்பட்டுள்ளது. 29 அமர்வுகளாக நடந்த மக்களவையில் 34 மணிநேரம் 5 நிமிடம் மக்களவை நடந்துள்ளது. 127 மணிநேரம் 45 நிமிடம் அமளியால் அவை முடங்கியுள்ளது.
30 அமர்வுகளாக நடந்த மாநிலங்களவையில் நான்கில் மூன்று பங்கு நேரம் அமளியால் வீணாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 44 மணிநேரம் அவை நடந்துள்ள நிலையில், 121 மணிநேரம் அவை முடங்கியே இருந்துள்ளதாகவும் பாராளுமன்ற செயலகம் தெரிவிக்கின்றது.