குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் உட்பட 16 பேருக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தால், கட்சியின் அமைச்சர்களை பாதுகாக்க குரல் கொடுக்க போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கமத்தொழில் அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் ஒன்றில் அங்கம் வகிக்கும் நபர்களாக அரசாங்கத்தை பாதுகாக்க முதுகெலும்பு இருந்தது போல், கட்சியினரை பாதுகாக்கவும் முதுகெலும்பு உள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் கட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கட்சியினர் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்களை மதிப்பது போல், சிறுபான்மையான உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படும். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை தேவையில்லை என துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்