குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்டு வரும் அழுத்தங்களின் போது, அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற முடியாது என அதனை கொண்டு வந்த தரப்பினரே கூறினர்.
இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதமருக்கு எதிராக வாக்களித்து விட்டு முழு அரசாங்கத்தை ஐக்கிய தேசியக்கட்சியிடம் ஒப்படைத்து விட்டு, வெளியேறுவதா அல்லது அரசாங்கத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவதா என்று சிந்திக்க நேர்ந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த ஏனைய 25 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தாலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்திருக்கும்.
இதன் காரணமாக ஜனாதிபதியின் அனுமதியோடு பெரும்பான்மையான நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்தோம். வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாது புறக்கணித்தோம். இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 உறுப்பினர்கள் பிரேரணையை ஆதரித்து வாக்களித்தனர்.
இவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடாக மாத்திரமே அரசியலில் ஈடுபடுவதாக எழுத்து மூலம் உறுதியளித்துள்ளதால், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.