207
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண புதிய அமைச்சர்கள் மூவர் மீது மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டு உள்ளது. குறித்த பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,
கூட்டு வங்கி கணக்குகள்.
வடமாகாண அமைச்சர்கள் தங்களது ஆளணியினருக்கு உள்ள வெற்றிடங்களுக்கு நியமித்தவர்களுடன், கூட்டு வங்கிக் கணக்கு வைத்திருந்து, அவர்களது சம்பளப் பணத்தையும் பெற்றுக் கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பயன்படுத்தாத பிக்கப் வாகனத்திற்கு எரிபொருள்.
அதேபோன்று, ‘பிக்கப்’ வாக னம் பயன்படுத்தாமலேயே, அதற்குரிய எரிபொருள் கொடுப்பனவாக 75ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொள்வதும் தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட ஆளணி சம்பளத்தில் மோசடி.
முதலமைச்சர் தனது ஆளணியில் 15பேரையும், அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட ஆளணியில் 10பேரையும் நியமிக்க முடியும். வடக்கில் முதலமைச்சர் உள்ளிட்ட 5 அமைச்சர்களும் இந்த எண்ணிக்கையில் தமது தனிப்பட்ட ஆளணி நிரப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, அந்த ஆளணியினருக்குரிய சம்பளம் அரசால் வழங்கப்படுகின்றது. தனிப்பட்ட ஆளணியில் நியமிக்கப்பட்டவர்கள் வழங்கிய வங்கிக் கணக்குக்கு பணம் வைப்பிலப்படுகின்றது.
வடக்கில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் 3 அமைச்சர்களின் அமைச்சில் தமது தனிப்பட்ட ஆளணியில் பெயர் குறிக்கப்பட்டவர்கள் பணியாற்றாமல், அமைச்சிலிருந்து அலுவலர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, ‘பிக்கப்’ வாகனத்தை அமைச்சர் பயன்படுத்துகின்றாரா என கோரப்பட்ட போது ,
அதற்கு அமைச்சர் ஒருவர் ‘பிக்கப்’ வாகனத்தைப் பயன்படுத்துவதாகவும், அது ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டது எனவும், மாதாந்தம் எரிபொருள் கொடுப்பனவாக 75 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் பதில் வழங்கப்பட்டது.
ஆனால் எந்தவொரு அமைச்சரும் இதுவரையில் ‘பிக்கப்’ வாகனம் பயன்படுத்தவில்லை. மேலும், ஒரு அமைச்சரின், தனிப்பட்ட ஆளணியில் பெயர் குறிப்பிடப்பட்டு சம்பளம் பெறுபவர் ஒருவரை, அந்த அலுவலகத்தில் பணியாற்றுகின்றாரா என்று அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படி ஒருவர் பணியாற்றவில்லை என்று பதில் வழங்கப்பட்டது.
மகளுக்கு வேலை.
மற்றொரு அமைச்சர், தனது மகளின் பெயரையும் தனிப்பட்ட ஆளணியில் குறிப்பிட்டு வழங்கியுள்ளார். அவரது மகள், அமைச்சின் அலுவலகத்தில் பணியாற்றியதே கிடையாது என்று அமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அமைச்சர், தனது கட்சியின் அலுவலகத்தையே, அமைச்சரின் உத்தியோகபூர்வ வதிவிடமாகக் குறிப்பிட்டு அதன் வாடகைப் பணத்தையும் பெற்றுக் கொள்கின்றார்.
சம்பளம் வழங்குவதில் மோசடி.
மூன்றாவது அமைச்சர் தனது தனிப்பட்ட ஆளணியில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களுட ன் கூட்டு வங்கிக் கணக்கு ஏற்படுத்தியுள்ளார். அந்த வங்கிக் கணக்கு இலக்கத்துக்கே சம்பளம் வைப்பிலப்படுகின்றது. அதனை மேற்படி அமைச்சர் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு தொகையை மாத்திரமே தனிப்பட்ட ஆளணியில் உள்ளவர்களுக்கு வழங்கி வந்துள்ளார். இந்த விடயம் அமைச்சின் அலுவலர்களால் கண்டறியப்பட்டு முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் நடவடிக்கை இல்லை.
முதலமைச்சர், அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. கூட்டு வங்கிக் கணக்கை தனிப்பட்ட வங்கிக் கணக்காக மாற்றி, அமைச்சர் எடுத்துக் கொண்ட பணத்தை மீள வழங்குமாறே பணித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சரைக் கேட்டபோது, அவர் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளார். இருப்பினும் முதலமைச்சர் தான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்ததை ஏற்றுக் கொண்டுள்ளார். அமைச்சர்களின் ஏனைய மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தவறானது என்றும் முதலமைச்சர் பதில் வழங்கினார்.என குறித்த் பத்திரிகை இன்றைய தினம் செய்தி வெளியிட்டு உள்ளது.
Spread the love