Home இலங்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒரு வரலாற்றுப் பார்வை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒரு வரலாற்றுப் பார்வை

by admin

யாழ் போதனா வைத்தியசாலையில் 100 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான கட்டடம் ஒன்று, அதன் அமைப்பு மாறாது புதுப்பிக்கப்பட்டு 10.03.2018 அன்று அருங்காட்சியகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இக்கட்டுரை வைத்திசாலைப் பணிப்பாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலை (Friend in Need Society Hospital)

இன்று வடமாகாணத்தில் உள்ள ஏறத்தாழ 1.3 மில்லியன் மக்களது பிரதான மருத்துவ சேவையை வழங்கும் யாழ் போதனா வைத்தியசாலையானது ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலை (Friend in Need Society Hospital) என்றே ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இவ் வைத்தியசாலையானது வைத்தியர் கிறீன் அவர்களுடைய உதவி மற்றும் ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழகத்தின் ஒத்துழைப்புடன், அன்றைய வடக்கு மாகாண அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக் (Ackland Dyke) அவர்களால் உருவாக்கப்பட்டது.

1850 முதல் 1907 வரை, ஆபத்தில் உதவும் மருத்துவ அலுவலர் குழாம் அனேகமாக வைத்தியர் கிறீன் அவர்களுடைய மருத்துவ கல்லூரியின் பட்டதாரிகளிலிருந்தே பெறப்பட்டனர். தனது காலத்தில் வைத்தியர் சாமுவேல் கிறீன் அவர்கள் திறமை மிக்க சத்திரசிகிச்சை நிபுணராக இருந்ததுடன் ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலையின் முதலாவது வருகை சத்திர சிகிச்சை நிபுணராகவும் கடமையாற்றினார். இவ் வைத்தியசாலை ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக தொண்டர்களால் நடாத்தப்பட்டது. 1907 இல் இவ் வைத்தியசாலை அரசாங்கத்தின் சிவில்(குடிசார்) மருத்துவத் திணைக்களத்தின் கீழ் வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இராணுவ மருத்துவத் திணைக்களத்தின் பதிலீட்டுக்குடிசார் மருத்துவத் திணைக்களமாயிருந்தது. பின்னர் யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை (Jaffna Civil Hospital) என மீளப் பெயரிடப்பட்டது.

1920 இன் மத்தியிலிருந்து 1930 இன் முற்பகுதி வரை தகைமை பெற்ற மூன்று சத்திர சிகிச்சை நிபுணர்கள் யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலையில் கடமையாற்றினார்கள். அவர்கள் வைத்தியர் I.T.குணரத்தினம்; F.R.C.S, வைத்தியர் A.H.C. டி சில்வா F.R.C.S, வைத்தியர் மில்றோய் போல் F.R.C.S ஆகியோர் ஆவர். அக்காலப்பகுதியில் வைத்தியசாலையின் மொத்தப்படுக்கைகள் வளம் 200 ஆகவிருந்தது (தனிப்பட்ட கட்டணம் செலுத்தும் நோயாளர்களுக்கான 6 படுக்கைகள் கொண்ட திருநாவுக்கரசு ஞாபகார்த்த விடுதி உட்பட). வைத்திய நிபுணர், சத்திர சிகிச்சை நிபுணர், கண் சிகிச்சை நிபுணர் மற்றும் ஒரு விடுதி அலுவலர் ஆகிய நிலைகளிலான 4 வைத்தியர்களை மொத்த மருத்துவ அலுவலர் குழாம் உள்ளடக்கி இருந்தது. வைத்தியர் மில்றோய் போல் அவர்கள் தமது வருகையுடன் அனுபவம் மிக்க சத்திர சிகிச்சைக் கூடச் சகோதரி ஒருவரை நியமிக்கச் செய்ததுடன் கொழும்பிலிருந்து உயர் அழுத்த தொற்று நீக்கியொன்றையும் தருவித்திருந்தார். அத்துடன் சத்திர சிகிச்சை கூடப் பரிசாரகர் ஒருவரைப் பயிற்றுவித்ததுடன் விபத்துகளால் காயமடைந்தவர்களுக்கான சத்திர சிகிச்சைகளை இரவில் கூட பெற்றோமக்ஸ் (Petromax) மற்றும் மின்சூழ் (Torchlight) வெளிச்சத்தில் செய்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படத்தக்கதிலும் பார்க்க அதிக கூட்டம் இல்லாமை மற்றும் குறிக்கப்பட்ட நேரங்கள் தவிர பார்வையாளர்கள் குறைவாக இருந்தமை மற்றும் கிருமியின்மையின் (Asepsis) கடுமையான அவதானிப்பு மற்றும் சத்திர சிகிச்சைக் கூடம் மற்றும் விடுதி ஆகிய இரண்டிலுமான அதிதிறமையான தாதியத்தால் சத்திர சிகிச்சைக்குப் பிந்தியதான கீழ்த்தொற்று (Sepsis) அசாதாரணமாயிருந்ததாக வைத்தியர் போல் அவர்கள் 1931 இல் தனது குறிப்பேட்டில் பதிவிடுகிறார்.

யாழ்ப்பாணத்தின் சுகாதார சேவைகளில் அரசாங்கத்துறையின் துரிதமான விரிவாக்கம் மற்றும் அபிவிருத்திகள் 1950 களில் ஆரம்பமாயின. அடிப்படை மற்றும உப விசேட துறைகளுக்கு நிபுணர்கள் நியமிக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலையானது 1956 இல் யாழ்ப்பாணம் அரச பொது வைத்தியசாலையானது (Govt. General Hospital Jaffna). 1960 களில்இங்கிலாந்தின்ராஜரீகக்கல்லூரியின் (Royal College of England) வைத்தியர்களின்பட்டப்பின்பயிற்சிஇறுதிப்பரீட்சைக்காகஅங்கீகரிக்கப்பட்டமத்தியநிலையமாகயாழ்ப்பாணம்பொதுவைத்தியசாலைஇருந்தது

அதிகரித்த சுகாதார அவசிய தேவைப்பாடுகள், அசௌகரியமான (Clumsy) மற்றும் அனுமதிக்கப்படத்தக்கதிலும் அதிகமான நோயாளர் வருகை, பரந்த நீண்ட காலத்திட்டங்கள் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் நீடிப்புக்களையும் புதிய கட்டிட நிர்மாணிப்புக்களையும் கொண்டு வந்தன. நோய்க்கூற்றியல் (Clinical) கற்கைகளுக்காக மருத்துவ மாணவர் அணியினர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு 1980 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் அனுமதிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் மருத்துவ கல்லூரி உருவாக்கப்பட்டதன் விளைவாக யாழ்ப்பாண வைத்தியசாலை ஒரு போதனா வைத்தியசாலைத்தரத்துக்கு உயர்ந்தது.

யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையின் தற்போதைய புள்ளிவிவரங்கள்

யாழ் மாவட்டம் 624,179 மதிப்பிடப்பட்ட சனத்தொகையுடன் 15 பிரதேச செயலகப்பிரிவுகளை உள்ளடக்கியதாகும். மாகாண நிர்வாகத்தின் கீழ் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்புச் சேவைகளை வழங்கும் 43 சுகப்படுத்தும் நிறுவனங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளன.

வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு மூன்றாம் நிலை வைத்தியசாலையான (Tertiary Care Hospital) யாழ் போதனா வைத்தியசாலையால் மூன்றாம் நிலை பராமரிப்புச் சேவைகள் வழங்கப்படுவதுடன் அது மத்திய சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றது. இவ் வைத்தியசாலை முழு வடக்கு மாகாணத்துக்குமான மூன்றாம் நிலை பராமரிப்பு வழங்குனராயிருந்தும் மனிதவளம், உட்கட்டமைப்பு, நிலம் மற்றும் போக்குவரத்து வசதிகள் பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்றது.

மருத்துவ அதிதீவிர சிகிச்சைப்பிரிவு (MICU), அதிதீவிர சத்திர சிகிச்சைப்பிரிவு (SICU), இருதய சிகிச்சைப்பிரிவு (CCU), முதிராக் குழந்தைகள் அலகு(NICU) நரம்பியல் சிகிச்சைப்பிரிவு, சிறுநீரக நோயியல் பிரிவு, இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சைப் பிரிவு முதலான விசேட பராமரிப்புப் பிரிவுகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 1280 படுக்கைகள் வளத்தைக் கொண்டுள்ளது.

தற்போது 1600 இற்கும் மேற்பட்ட அர்ப்பணிப்புள்ள அலுவலர் குழாம் அங்கத்தவர்கள் 3 சேவை மாற்று முறைமையில் 24 மணித்தியாலங்கள் சேவை செய்கின்றனர். இந்த அலுவலர் குழாத்தில் மருத்துவ பீட வைத்திய நிபுணர்கள் உட்பட 77 விசேட வைத்திய நிபுணர்கள் கடமையாற்றுகின்றனர். 244 வைத்திய உத்தியோகத்தர்கள், 494 தாதிய உத்தியோகத்தர்கள், 97 நிறைவாக்கும் மருத்துவத் தொழில்புரிவோர், 50 துணை மருத்துவ அலுவலர் குழாத்தினர், மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் முதலான பல பிரிவினர் உள்ளனர்.

நாளாந்தம் சுமார் 4500 நோயாளர்களுக்கு இவ்வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகின்றது. இவர்களில் வெளிநோயாளர்கள் 800 பேர், உள்ளக நோயாளார்கள் 1200 பேர் ஆவர். இவர்களுடன் 2500 பேர் பல்வேறு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறுகின்றனர். ஆகவே, இவ் வைத்தியசாலையை ஒவ்வொரு நிலையிலும் (Aspect) மேம்படுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையின் அருங்காட்சியகம் (Museum)

வைத்தியசாலையில் உள்ள நூறு வருடங்கள் பழமையான கட்டிடங்களில் ஒன்று தற்போது அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்படுகின்றது.  மிகவும் உயர்தரமான கட்டடப் பொருட்களைக் கொண்டு அமைப்பு மாறாது இக்கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திருமதி. தயாரதி சீவரத்தினம் அவர்கள் தமது கணவர் திரு.S.V. பொன்னம்பலம்  சீவரத்தினம் அவர்களுடைய ஞாபகார்த்தமாக வழங்கிய மனமுவந்த நன்கொடையால் இவ் அருங்காட்சியக கட்டிடம் உருவாகியுள்ளது. இங்கே 20 – 30 வருடங்களுக்கு முன்னர் பாவனையில் இருந்த சத்திரசிகிச்சைக் கூட, ஆய்வு கூட உபகரணங்கள் தற்போது பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் வைத்தியசாலை தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன.

பொதுமக்கள் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளிவந்த செய்திக் குறிப்புக்கள், கட்டுரைகள், புகைப்படங்கள், ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழகம், 1850 களில் வைத்தியசாலை உருவாக்கத்தில் பங்களித்த அக்லாண்ட டைக், யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை தொடர்பான தகவல்கள், போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டமை பற்றிய செய்தி ஆதரா மூலங்கள், 1990 மற்றும் 1995 காலப்பகுதியில் இடம் பெயர்ந்து இயங்கியமை பற்றிய செய்திகள், புகைப்படங்கள் முதலான வரலாற்றுத் தகவல்களை தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன். ஆவணங்களைப் பேணுவோர் தங்களிடம் உள்ளவற்றை பகிர்ந்து எண்ணிம முறையில் பிரதி எடுத்த பின்னர் மீளப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் வைத்தியசாலையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஏனைய துறைசார் உத்தியோகத்தர்கள்  தங்கள் விவரங்களை புகைப்படங்களை தந்து ஆவணப்படுத்தலுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வாரத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவர். அருங்காட்சியகம் மேம்படுத்தப்பட்டவுடன் ஊடகங்கள் வாயிலாக பார்வையிடும் நேரம் அறிவிக்கப்படும்.

வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி MBBS, PG Dip in Management (RUSL), M.Sc., M.D (Medical Administration)

பணிப்பாளர்

போதனா வைத்தியசாலை

யாழ்ப்பாணம்

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More