ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவத்திற்கு கட்டளையிட்ட குற்றச்சாட்டில் இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரி அமல் கருணாசேகர கைதுசெய்யப்பட்டது போல், அந்த குற்றச்சாட்டின் கீழ் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட வேண்டும் என ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவத்திற்கு சரத் பொன்சேகா பொறுப்புக் கூறவேண்டும் என ரணில் விக்ரமசிங்கவும் குற்றம் சுமத்தியிருந்தாக கூறியுள்ள வீரசேகர, நாடாளுமன்ற குறிப்பேட்டில் அது பதிவாகியுள்ளதாகவும் இதனால், கொலைக்கு கட்டளையிட்ட குற்றச்சாட்டின் கீழ் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல், கமல் குணரத்ன, அமல் கருணாசேகர தரைப்படையில் பணியாற்றினார். போர் நடைபெற்ற போது படை நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இராணுவத்தில் இரண்டாம் நிலையில் இருந்த போதே அவர் ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்று ஒரு மாதத்தில் கொலைக்கு கட்டளையிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். படையினர் வேட்டையாடப்படுகின்றனர் என்பதற்கு இந்த கைது தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.