அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, இன்று அதிகாலை முதல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்த தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரசாயன ஆயுதங்களை தயாரிப்பது, பரப்புவது மற்றும் பயன்படுத்துவதை வன்மையாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் தொடங்கியுள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார் இதேவேளை ஹோம்ஸ் மாகாணத்தில் ஒரு ராணுவ தளத்தை இலக்கு வைத்து அமெரிக்க கூட்டணிப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை தங்கள் பாதையில் இருந்து திருப்பப்பட்டுள்ளதாகவும், அதில் மூன்று குடிமக்கள் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் பொறுமை காக்க ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிரியாவின் டூமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து நிலையில் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக’கை விடுத்தீரந்ததனை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிரியா விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் ஒருமித்த கருத்து ஏற்படாதது கவலையளிக்கிறது எனவும் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா , பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் சிரியா பிரச்சினையில் சுமூக உடன்பாட்டை எட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினை வரம்பை தாண்டிவிடக்கூடாது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகளும் பொறுமை காக்க வேண்டும். கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு சிரியாவில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.