Home இலங்கை விக்னேஸ்வரன் வீசிய குண்டு உண்மையா டம்மியா? நிலாந்தன்…

விக்னேஸ்வரன் வீசிய குண்டு உண்மையா டம்மியா? நிலாந்தன்…

by admin

விக்னேஸ்வரனின் வாராந்தக் கேள்வி பதில் குறிப்பு பலதரப்புக்களாலும் விமர்சிக்கப்படும் ஒன்று. அவர் முகத்துக்கு நேரே கேட்கப்படும் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக இப்படி கேள்வியும் நானே பதிலும் நானேயென்று ஒரு குறிப்பை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. அவரை முகத்துக்கு நேரே எதிர்பாராதவிதமாகக் கேள்விகளைக் கேட்டால் அவர் திணறுவார். அல்லது நிதானமிழப்பார் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. திருமலையில் நடந்த பேரவைக்கூட்டத்தில் அவரிடம் அவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தவிதம் அப்படித்தானிருந்தது என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான சங்கடங்களைத் தவிர்ப்பதற்காகவே அவர் இப்படியொரு உத்தியைக் கையாண்டு வருவதாகவும் கருதப்படுகிறது. இவ்வுக்தி கருணாநிதியின் கடிதங்களை ஞாபகப்படுத்தும் ஒன்று என்ற தொனிப்பட மூத்த ஊடகவியலாளார் வி.தனபாலசிங்கம் ஒரு முறை முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் மேற்படி உத்திக்கூடாக அவர் சமகால விவகாரங்கள் பலவற்றிற்கும் தனது நோக்கு நிலையிலிருந்து பதில் வழங்கி வந்திருக்கிறார். இவ்வாறு கடைசியாக அவர் வழங்கிய பதில் கடந்த பல மாதங்களாகத் தொங்கிக்கொண்டிருந்த ஒரு கேள்விக்குரிய பதிலாக அமைந்துவிட்டது. ஒரு மாற்று அணிக்கு அவர் தலைமை தாங்கத் தயாரா? என்பதே அது. இப்பதில் கூட அவராக வழங்கியது என்பதை விட சுமந்திரனுக்கு அவர் ஆற்றிய எதிர்வினை என்றே கூற வேண்டும். தமிழ் அரசியலில் குறிப்பாக 2009 இற்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியலில் அதிகம் முக்கியத்துவம் மிக்கதொரு பதிலை அவர் இவ்வாறு வழங்கியது சரியா? என்ற கேள்வியும் இங்குண்டு.

திருப்பகரமான ஒரு தருணத்தில் புதிய அரசியல் சுற்றோட்டங்களை நொதிக்கச் செய்யும்ஓர் அறிவிப்பாக வெளியிட வேண்டிய ஒன்றை வெறுமனே வாராந்தக் கேள்வி பதிலாக,ஒரு சுமந்திரனுக்கு அதுவும் அவருடைய மாணவனுக்கு வழங்கிய ஒரு பதிலாகச் சுருக்கியது ஏன்?அந்த அறிவிப்பின் முக்கியத்துவத்தை அவரே குறைத்து மதிப்பிடுகிறாரா?. அப்பதிலை வழங்கிவிட்டு அவர் இந்தியாவுக்குச் சென்று விட்டார். அப்பதிலின் பின்விளைவுகளை எதிர்கொள்ள விரும்பாமல் அல்லது அப்பதிலைத் தொட்டு மேலெழக்கூடிய புதிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தவிர்ப்பதற்காக அவர் அரங்கை விட்டுச் சென்றாரா? என்ற கேள்வியும் உண்டு.
அப்பதில்களில்; அவர் இரண்டு விடயங்களைக் கோடி காட்டியுள்ளார். ஒன்று ஒரு புதிய கூட்டு அல்லது ஒரு கட்சியை உருவாக்குவது பற்றியது. இரண்டாவது கூட்டமைப்பின் வேட்பாளராக அக்கட்சி தன்னை மறுபடியும் அழைக்கும் என்ற எதிர்பார்ப்போ காத்திருப்போ அவரிடம் இல்லையென்பது.

இதில் முதலாவதின் படி ஒரு கட்சியை உருவாக்குவதை விடவும் ஒரு கூட்டை உருவாக்குவதே உடனடிக்கு சாத்தியம். ஒரு கட்சியைப் பதிய அதிக காலம் எடுக்கும். ஆனால் ஒரு கூட்டை உருவாக்கும் பொழுது அதிலுள்ள ஏதாவது ஒரு கட்சிப் பதிவின் கீழ் இயங்கலாம். ஒரு பொதுச் சின்னத்தையும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இங்கேயும் ஒரு பிரச்சினை இருக்கிறது. எத்தகைய கட்சிகளோடு அவர் சேரலாம் என்பது. ஏற்கெனவே தமிழ் மக்கள் பேரவையில் மூன்று கட்சிகள் அவரது இணைத்தலைமையை ஏற்றிருந்தன. ஆனால் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அக்கட்சிகளில் இரண்டு அவருடைய தலைமையை ஏற்கத் தயாராகக் காணப்பட்ட போதிலும் அவர் அதற்குத் தயாராகக் காணப்படவில்லை. இதனால் இரண்டு கட்சிகளும் இரு வேறு திசைகளில் போயின.

தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தன்னை முன்னரை விடப் பலமாக ஸ்தாபித்துக்கொண்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ் அந்தளவிற்கு தன்னை ஸ்தாபித்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் இனிமேலும் இக்கட்சிகளை பேரவையின் பின்னணியில் ஒருங்கிணைக்கும் பொழுது அவர்களை எந்த அடிப்படையில் அவர் இணைத்துக் கொள்வார்? தேர்தலுக்கு முன்னரே மக்கள் முன்னணி தன்னை ஒரு மாற்றாக கருதிச் செயற்படத் தொடங்கிவிட்டது. தேர்தல் முடிவுகளின் பின் அக்கட்சி மேலும் பலமாகக் காணப்படுகிறது. எனவே முன்பு தமிழ் மக்கள் பேரவையில் இருந்ததை விடவும் இப்பொழுது அக்கட்சி அதிகம் பேரம் பேசும் பலத்தோடு காணப்படுகிறது. இந்நிலையில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொழுது அவற்றிற்கு எவ்வளவு விகித பிரதிநிதித்துவத்தை வழங்குவது என்பதை முன்னரைப் போல இப்பொழுது முடிவெடுக்க முடியாது.இல்லையென்றால் ஏற்கனவே பதியப்பட்டு இப்பொழுது இயங்காமலிருக்கும் ஏதாவது ஒரு கட்சியின் பதிவை வாங்க வேண்டும்
இது தவிர விக்னேஸ்வரன் பேரவைக்குள் சில அரசியல் பிரமுகர்களை புதிதாக உள்வாங்கியிருக்கிறார். இவர்களுக்கென்று வாக்கு வங்கிகளும் உள்ளுர் மட்ட வலைப்பின்னலும் உண்டு. இவற்றையும் தனக்கிருக்கும் ஜனவசியத்தையும், அங்கீகாரத்தையும் அடித்தளமாகக் கொண்டு தனது பேரத்தை அவர் அதிகப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் புதிய பேரச் சூழலானது மாற்று அணி எனப்படுவது கூட்டமைப்பை விட பிரமாண்டமான ஒரு கூட்டு என்ற தோற்றத்தை கட்டியெழுப்பத் தக்கதாக அமைய வேண்டும். இது முதலாவது.

இரண்டாவது சம்பந்தர் அவரை மறுபடியும் கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்துவாரா என்பது? கூட்டமைப்பின் தலைவர்கள் மட்டத்திலான அபிப்பிராயங்களின் படி விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சராக்குவதென்று தலைவர்கள் முடிவெடுத்தாலும் கீழ்மட்டத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதே சமயம் அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் பகை நிலைக்குத் தள்ளாமல் அவரை கூட்டமைப்பிற்குள்ளேயே பேணலாம் என்று சில கூட்டமைப்புப் பிரமுகர்கள் கருதுவதாகவும் தெரிகிறது. இவ்வாறு கருதுவோர் விக்னேஸ்வரனுக்கென்று ஒரு பலமாக வாக்குத்தளம் உண்டு என்று நம்பியே அவரை கட்சிக்கு வெளியே விடத் தயங்குகிறார்கள். கிட்டத்தட்ட சம்பந்தரும் விக்னேஸ்வரனுக்குள்ள பலத்தை குறைத்து மதிப்பிடவில்லையென்றே தெரிகிறது. சுமந்திரன் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த பின் விக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தர் தெரிவித்திருப்பது மிகவும் முதிர்ச்சியான தந்திரமான, சமயோசிதமான பதிலாகும். பொருத்தமான ஆளை பொருத்தமான நேரத்தில் கட்சி தெரிந்தெடுக்கும் என்று அவர் கூறுகிறார். எனவே விக்னேஸ்வரனை முழுப்பகை நிலைக்குத் தள்ள சம்பந்தர் தயங்குகிறார். குறிப்பாக விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபின் அவரது பேரம் அதிகரித்திருக்கிறது. இதையும் கவனத்திலெடுத்தே சம்பந்தர் முடிவெடுப்பார். அதனால் மாகாணசபைகள் கலைக்கப்பட்ட பின் அவர் விக்னேஸ்வரனை மறுபடியும் அணுக மாட்டார் என்று இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது.விக்னேஸ்வரன் அவரது கேள்வி-பதிலில் ஜி.ஜி. பொன்னம்பலத்தை மேற்கோள் காட்டி கூறியிருப்பது போல பதவி அவரைத் தேடி வந்தால் அதாவது சம்பந்தர் அவரைத் தேடி வந்தால் அதை அவர் எவ்வாறு எதிர் கொள்வார்?

இது தவிர மற்றொரு விடயமும் இங்குண்டு. உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் மாகாண சபைத்தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாரா? என்பது. இது விடயத்தில் மேலும் ஒரு விசப்பரீட்சையை வைக்க அரசாங்கம் முயலுமா?

இவ்வாறானதோர் பின்னணிக்குள் மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் அறிவிக்குமோ இல்லையோ சம்பந்தர் மறுபடியும் விக்னேஸ்வரனை அணுகுவாரோ இல்லையோ? தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் எதுவென்பதை விக்னேஸ்வரன் விரைவிலேயே முடிவெடுக்க வேண்டும்.ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப விரும்பும் தலைவருக்கு அதுதான் அழகு. பேரவைக்குள் அங்கம் வகித்த கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டை உருவாக்கும் முயற்சிகள் இழுபட்டுக் கொண்டு போன ஒரு பின்னணியில் அரசாங்கம் உள்ளூராட்சிசபைத் தேர்தல்களை அறிவித்தது. ஒரு கூட்டுக் கனிய முன்பே தேர்தல் அறிவிப்பு வெளிவந்தது. இதனால் அக்கூட்டு சாத்தியப்படவேயில்லை. இப்பொழுதும் அரசாங்கம் எடுக்கப்போகும் ஒரு நகர்வுக்கு காட்டப்போகும் எதிர்வினையாக விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் அமையக்கூடாது. மாறாக தமிழ் மக்களின் கூட்டுரிமைகளை உறுதிப்படுத்தும் விதத்திலான ஒரு தீர்வைப் பெறுவது என்ற நோக்கத்தின் அடிப்படையில் சிந்தித்து ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்குப் பக்கபலமாக ஒரு தேர்தல் வியூகத்தையும் வகுக்க வேண்டும்.

விக்னேஸ்வரன் அடிக்கடி கூறுகிறார். பேரவையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றப்போவதாக. ஆனால் இன்று வரையிலும் அதுவொரு பிரமுகர்மைய அமைப்பாகவே காணப்படுகிறது. அதற்குள் புதிதாக இணைக்கப்பட்டவர்களும் மக்கள் மைய செயற்பாட்டாளர்கள் அல்ல. அவர்களில் ஒருவர் தொடக்கத்தில் மக்கள் மையச் செயற்பாட்டாளராகக் காணப்பட்ட போதிலும் பின்னாளில் தேர்தல் அரசியலுக்கூடாகவே தன்னை ஸ்தாபித்துக் கொண்டார். விக்னேஸ்வரனின் இதுவரை கால செயற்பாடுகளைத் தொகுத்துப் பார்க்கும் போதும் அவர் விரும்பிச் சேர்த்திருக்கும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளையும் தொகுத்துப் பார்க்கும் போதும் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது விக்னேஸ்வரனும் அவரைச் சேர்ந்தவர்களில் பலரும் தேர்தல் மைய அரசியல்வாதிகள்தான். மக்கள் மையச் செயற்பாட்டாளர்களாக அவர்கள் இனிமேல்தான் வளரவேண்டியிருக்கிறது.

ஒரு மக்கள் மைய இயக்கத்தைக் கட்டியெழுப்பத் தேவையான அடிமட்ட உறவுகள் விக்னேஸ்வரனிடமும் குறைவு. பேரவையிடமும் குறைவு. சுமந்திரனைப் போலவே விக்னேஸ்வரனும் கொழும்பு மையத்திலிருந்து வந்தவர். அவர் அடிக்கடி கூறுவார். வாக்களித்த மக்களின் துயரங்களைக் கண்ட பின்னரே தான் இப்போதிருக்கும் நிலைப்பாட்டை எடுத்ததாக. எனினும் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்வில் அவர் எத்தனை செயற்பாட்டு ஆளுமைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்? அவரோடு நெருக்கமாகக் காணப்படும் ஆளுமைகளில் எத்தனை பேர் செயற்பாட்டு ஆளுமைகள்? விக்னேஸ்வரன் அதிக காலம் ஒரு நீதிபதியாக இருந்தவர். அதனாலேயே ஓர் ஒதுங்கிய வாழ்வு வாழ்ந்தவர். வடக்கில் அவர் மனம் விட்டுக் கதைக்கக்கூடிய இரகசியங்களைப் பரிமாறக்கூடிய விசுவாசமான ஆளுமைகள் எத்தனைபேர் அவர் அருகில் உண்டு? அப்படிப்பட்ட ஆளுமைகள் குறைவு என்பதினாலா அவர் அவுஸ்திரேலியாவிலிருக்கும் தனக்கு நெருக்கமான ஒருவரை ஆலோசகராக வைத்துக் கொண்டார்? அந்த ஆலோகர் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் இல்லை.

இப்படியாக ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்பத் தேவையான விசுவாசமிக்க இலட்சியவாதிகள் எத்தனை பேரை விக்னேஸ்வரன் இதுவரை கண்டுபிடித்திருக்கிறார்? இது அவருடைய அடிப்படைப் பலவீனம். இதனாலேயே கீழிருந்து மேல் நோக்கிய ஒரு மக்கள் இயக்கத்தை அவர் கட்டியெழுப்ப முடியாதிருக்கிறார். பதிலாக தனக்கு நெருக்கமாகக் காணப்படும் பிரமுகர்களை வைத்துக் கொண்டு மேலிருந்து கீழ் நோக்கிய ஒரு வலைப்பின்னலைக் கட்டியெழுப்பலாம். இதை இதன் பிரயோக அர்த்தத்தில் கூறின் ஒரு தேர்தல் மையக் கட்சியையோ அல்லது ஒரு கூட்டையோ கட்டியெழுப்பத் தக்க ஆளுமைகள் தான் விக்னேஸ்வரனைச் சுற்றிக் காணப்படுகின்றன. அதைக்கூட மாகாணசபைத் தேர்தல் வரும்வரைக் காத்திருந்து திடீரென்று விழித்தெழும்பி செய்ய முற்பட்டால் இப்போதிருக்கும் மாற்றுத்தளமும் உடையக்கூடிய ஆபத்து உண்டு. கொழும்பிலிருந்து வரும் தேர்தல் அறிவிப்புக்களுக்கு எதிர்வினையாற்றும் ஓர் அரசியல் எனப்படுவது மிகப் பலவீனமானது. ஒரு மக்கள் மைய அரசியலை மக்களிடமிருந்தே கட்டியெழுப்ப வேண்டும். தேர்தல் அறிவிப்புக்களிலிருந்து அல்ல.

எதுவாயினும் சுமந்திரனின் கருத்துக்கள் உடனடிக்கு மாற்று அணிக்கு நன்மைகளை விளைவித்திருக்கின்றன. அவை விக்னேஸ்வரனை ஒப்பீட்டளவில் துலக்கமான ஒரு முடிவை அறிவிக்குமாறு நிர்ப்பந்தித்திருக்கின்றன. கடந்த பல மாதங்களாக அவர் ரஜனிகாந்தைப் போலக் கருத்துத் தெரிவித்து வந்தார். இப்பொழுது கமலகாசனைப் போல செயற்படக்கூடும் என்று தோன்றுகிறது. இதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு எம்.ஜி.ஆரைப் போலாவது அவர் வென்று காட்ட வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பதோ ஒரு மண்டேலாவைப் போன்ற தலைமைதான்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More