வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சி.தவராசா இருந்துவரும் நிலையில், அந்தப் பதவியை தமக்கு வழங்குமாறு, மாகாண சபையில் அங்கம் விகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதனால் அந்தப் பதவியைப் கொடுப்பதா அல்லது தொடர்ந்தும் தவராசாவையே இருக்க அனுமதிப்பதா என்பது தொடர்பில் இழுபறிநிலை காணப்படுகவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாணசபைத் தேர்தலின் பின்னர் சபையின் எதிர்க்கட்சித் தலைவராக ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்த க.கமலேந்திரன் (கமல்) பதவி வகித்தார். அதே கட்சியைச் சேர்ந்த, பிரதேச சபைத் தவிசாளராக இருந்த றெக்க்ஷியன் என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் கமல் கைது செய்யப்பட்டார். அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். அதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கமல், மாகாண சபை உறுப்பினர் பதவியையும் இழந்தார். இந்த நிலையில், பட்டியலில் அடுத்து இருந்த தவராசா உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு எதிர்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டார்.
அதன்பின்னரும், அவரது கட்சிக்குள் ஏற்பட்ட உள் முரண்பாடு கள் காரணமாக சி.தவராசாவையும் அந்தப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஈ.பி.டி.பியினர் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் சபையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போதும் தவராசாவே எதிர்க்கட்சித் தலைவராக பதவிவகித்து வருகின்றார்.
வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் சில மாதங்களில் நிறைவுபெறவுள்ளது. இந்தநிலையில் சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தவராசாவை நீக்கிவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாகப் போட்டியிட்டு வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினராக உள்ள பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஜெயதிலகவை அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாண உறுப்பினர்கள், மாகாண சபையின் அவைத்தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.