ஸ்ரீதேவிக்கு தேசிய விருது அளிப்பதற்கு பொலிவுட் இயக்குனர் சேகர் கபூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேசிய விருது தேர்வுக் குழு தலைவராக பாலிவுட் இயக்குனர் சேகர் கபூர் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையிலான குழு 65வது தேசிய விருது பட்டியலை தயார் செய்து அறிவித்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீதேவி இறந்துவிட்டதால் அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். “ ஸ்ரீதேவி நல்ல நடிகை தான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் மாம் படத்திற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டதை ஏற்க முடியாது” என்ற விவாதங்கள் வெளிக் கிளம்பின.
“எனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையேயான நட்பால் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் நான் தேர்வுக் குழுவை சந்திக்கும்போது அவர்களை மீண்டும் வாக்களிக்குமாறு கூறுவேன். பிற நடிகைகளை பற்றி பேசிவிட்டு அது ஸ்ரீதேவியாக இருக்கக் கூடாது என்பேன்” என சேகர் கபூர் தெரிவித்தார்.
“எப்பொழுது வாக்களித்தாலும் அது ஸ்ரீதேவிக்கு தான் கிடைத்தது. ஸ்ரீதேவிக்கு விருது வழங்கக் கூடாது என்று சண்டை போட்டவன் நான். ஸ்ரீதேவி இறந்துவிட்டதால் அவருக்கு விருது அளிக்காதீர்கள். இது மற்ற நடிகைகளுக்கு செய்யும் துரோகம். அவர்கள் 10 முதல் 12 ஆண்டுகள் வரை கடினமாக உழைத்துள்ளார்கள்” என தான் கூறியதாக சேகர் கபூர் தெரிவித்துள்ளார்.
மிஸ்டர் இந்தியா படத்தில் சேகர் கபூரும், ஸ்ரீதேவியும் சேர்ந்து பணியாற்றியுள்ளனர். சேகர் கபூரும், போனி கபூரும் சேர்ந்து ஸ்ரீதேவியை பற்றி ஆவண படம் எடுக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை “ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளதை அறிந்து நாங்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இது எங்களுக்கு சிறப்பான தருணம். அவர் தான் நடித்த அனைத்து படங்களிலும் சிறப்பாக நடித்துள்ளார். அவர் சூப்பர் நடிகை மட்டும் அல்ல. சூப்பர் மனைவி மற்றும் சூப்பர் அம்மா” என ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.