ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 காவல்துறையினரையும் முதல்வர் மெகபூபா முப்தி பணி நீக்கம் செய்துள்ளார். மேலும் குறித்த வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்துக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம் ரசானா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஒருவர் காணாமல்போயிருந்த நிலையில அவரது உடல் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், அப்பகுதியில் உள்ள சிறிய கோயில் ஒன்றில் அச்சிறுமி மயக்க நிலையில் அடைத்து வைக்கப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் கோயில் நிர்வாகியான வருவாய்த்துறை முன்னாள் அதிகாரி அவரது மகன் , மருமகன், மகன் அவர்களின் நண்பன் மற்றும் சிறப்பு காவல்துறை அதிகாரிகள் இருவர், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், தலைமைக் காவலர் ஒருவர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் நால்வரையும் உள்துறை அமைச்சுக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் மெகபூபா முப்தி நேற்று பணி நீக்கம் செய்துள்ளார்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் வழக்கு விசாரணை 90 நாட்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது