உண்மையை மறைத்து பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தாய்நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக உள்ளதென ஜனாதிபதி ; லண்டனில் வசிக்கும் இலங்கையர்களிடம் தெரிவித்தார். தாய்நாட்டின் உண்மையான நிலைமைகள் பற்றிய சரியான புரிந்துணர்வுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு வென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் லண்டனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (17) பிற்பகல் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஸ்தாபித்து, நாட்டை அபிவிருத்தியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் பற்றிய சரியான தகவல்கள் நாட்டு மக்களை சென்றடைவதில்லை என தெரிவித்தார். சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் குறுகிய அரசியல் மற்றும் வர்த்தக நோக்கங்களுடன் உண்மையை மறைத்து பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்வதற்கு முயற்சிப்பதே இதற்கான முக்கிய காரணமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி நாட்டில் சகல துறை சார்ந்தவர்களும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தாம் பெற்றுக்கொண்டுள்ள சுதந்திரம் பற்றிய சரியான புரிந்துணர்வுடன் செயற்படவில்லை எனவும் தெரிவித்தார்.