கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திரைத்துறையினர் மேற்கொண்டுவந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாக விஷால் தெரிவித்துள்ளார். திரைப்பட தயாரிப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 1-ம் திகதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக கடந்த 49 நாட்களாக புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை என்பதுடன் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், டிஜிட்டல் சேவை அமைப்புகள் பங்கேற்றிருந்தன.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் கருத்து தெரிவித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் திரைஉலக பிரச்சினைகள், தியேட்டர் அதிபர்களின் கோரிக்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தியேட்டர்களில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணத்தை குறைப்பது, டிக்கெட் விற்பனையை கணினிமயமாக்குவது, கேளிக்கை வரி குறைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிவித்தார்.
மேலும் வேலைநிறுத்தத்தை திரும்பப்பெறுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், விஷால் அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் சினிமாவில் ஒரு மாதத்ததுக்கு மேலாக நடந்து வந்த சீரமைப்பு முடிவுக்கு வந்தது. படங்கள் விரைவில் திரைக்கு வரும். டிஜிட்டல் சேவையில் இ-சினிமா 50 சதவீத விலையை குறைத்துள்ளது. டி சினிமாவுடனும் விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறோம்.
ஜூன் முதல் டிக்கெட் விற்பனை கணினி மயமாக்கப்படும், மேலும் சினிமா டிக்கெட்டுகள் இணையதளத்திலேயே விற்பனை செய்வது குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு அளித்த பெப்சி நிறுவனம், தமிழ் சினிமாவுக்கு நன்றி. தமிழக அமைச்சர்களுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்