குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட திருநெல்வேலி சந்தை கட்டடம் எழுந்தமானமாக கட்டப்பட்டது என தற்போது ஆட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பே குற்றம் சாட்டியுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் முதலாம் அமர்வு இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது உரையாற்றும் போதே சபையின் தவிசாளர் தியாக மூர்த்தி அக் குற்ற சாட்டை முன்வைத்தார்.
அது குறித்து மேலும் தெரிவிக்கையில் ,
திருநெல்வேலிச் சந்தைக் கட்டிடம் மேல்மாடியில் அமைந்துள்ளது. யாழ் மாவட்டத்தில் முதல்நிலையில் இருந்த திருநெல்வேலி சந்தை கட்டட சீர்கேட்டினால் ஒரு கட்டமைப்புடன் ஒழுங்காக இயங்காத நிலையில் தர நிலையிலிருந்து பின்தள்ளப்பட்டுள்ளது.
திருநெல்வேலிச் சந்தையை முன்னர் கட்டியவர்கள் ஒரு எழுந்தமானத்தில் கட்டிவிட்டார்கள். அதனால்தான் அதன் ஸ்திரத் தன்மைகுறித்துக் கூட ஆய்வுசெய்ய முடியாதுள்ளது. ஆய்வு செய்வதற்காக முன்னர் வடக்கு மாகாண பொறியியல் குழுவை அணுகியிருக்கிறார்கள். அவர்கள் மறுத்துவிட்டார்கள். தங்கள் பாட்டிற்கு கட்டிவிட்டு ஆய்வு செய்ய அழைத்தால் யார்தான் வருவார்கள் என தெரிவித்தார்.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரான தியாகமூர்த்தி தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர். கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குள் நல்லூர் பிரதேச சபை இருந்த கால பகுதியில் தான் குறித்த சந்தைக் கட்டடம் கட்டப்பட்டது. அக்கால பகுதியில் நல்லூர் பிரதேச சபை தவிசாளராக இருந்தவர் வசந்தகுமார் என்பவர்.
அதேவேளை அக்கால பகுதியில் தற்போது தவிசாளராக உள்ள தியாகமூர்த்தி சபை உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.