குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரை இந்தியாவின் றோ புலனாய்வு அமைப்பு இயக்கி வருவதாக சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வரும் திருத்தச் சட்டமூலம் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து எழுதிய நாடகத்தின் பிரதி எனவும் பந்துல குணவர்தனவின் சில கருத்துக்கள், அவருக்கும் இந்த நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் உறுப்பினர் வசந்த பண்டார, முதல் முறையாக பந்துல குணவர்தன மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக கூட்டு எதிர்க்கட்சி இந்த பொறியில் கால் வைத்தால், அவர்கள் செய்யும் இறுதியான காட்டிக்கொடுப்பு இதுவாகும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கும் யோசனை ஆதரவளித்து, நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனைக்கும் கூட்டு எதிர்க்கட்சி ஆதரவளிக்குமாயின் அது மிகப் பெரிய காட்டிக்கொடுப்பாக இருக்கும். எதற்காக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வரும் 20வது திருத்தச் சட்டத்தை கூட்டு எதிர்க்கட்சி ஆதரிக்கின்றது என்பது தெளிவில்லை.
ஏதோ ஒருவகையில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுமாயின் அதனோடு சேர்த்து 13வது திருத்தச் சட்டத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் எனவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கலாநிதி குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.