குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…..
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இடையில், பிளவுகளை ஏற்படுத்த சிலர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கட்சியை பிளவுப்படுத்த எவருக்கும் இடமளிக்க போவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கட்டாயம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மகிந்த ராஜபக்சவுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன தற்போது இலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சியாக மாறியுள்ளது. ஒரு வருடம் என்ற குறுகிய காலத்தில் கட்சி வளர்ச்சியடைந்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் ஆகிய பிரதான இரண்டு காரணங்களால் கட்சி பிரபலமடைந்துள்ளதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பசில் அணி, கோத்தபாய அணி, மகிந்த அணி என பிளவுப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற முடியாது போனதாகவும் கூறப்படுகிறது. ராஜபக்ச சகோதரர்கள் மூன்று பேருக்கும் இடையில் அடுத்த கட்ட அரசியல் தலைமைத்துவ நகர்வு தொடர்பில் மோதல்கள் இருப்பதாகவும் பேசப்படுகிறது.