குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் உலக சைக்கிளோட்ட சம்பியன் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ரோங், அனுசரணையாளருக்கு நட்டஈடு வழங்க இணங்கியுள்ளார். ஆர்ம்ஸ்ட்ரோங்;, இதன்படி அமெரிக்க தபால் திணைக்களத்திற்கு நட்டஈடு வழங்கவுள்ளார். உலகின் முதனிலை சைக்கிளோட்டப் போட்டியான டுவர் டி பிரான்ஸ் போட்டித் தொடரை ஏழு தடவைகள் வென்று ஆர்ம்ஸ்ட்ரோங் சாதனை படைத்திருந்தார். எனினும், ஊக்க மருந்து பயன்படுத்தியதாக ஆர்ம்ஸ்ட்ரோங் ஒப்புகொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவரது அனைத்து பட்டங்களும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டன. இதனால் அனுசரணையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் அடிப்படையில் சைக்கிளோட்டப் போட்டியில் தபால் திணைக்களத்தின் சார்பில் போட்டியிட்டு வந்த ஆர்ம்ஸ்ட்ரோங் 5 மில்லியன் டொலர்களை திணைக்களத்திற்கு நட்டஈடாக வழங்க உள்ளார்.
இது தொடர்பான இணக்கப்பாடு ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகவும் நூதனமான போட்டி மோசடிகளில் ஒன்றாக ஆர்ம்ஸ்ட்ரோங்கின் இந்த மோசடி கருதப்படுகின்றது.